குவார்ட்டர், ஆஃப், புல் விலை திடீர் உயர்வு... குடிமகன்கள் ஷாக்!

குவார்ட்டர் பாட்டில் 5 ரூபாயும், ஆப் 10 ரூபாயும், புல் 20 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் பார் வசதி உள்ளது. டாஸ்மாக் கடைகளில் எப்போதும் திருவிழா கூட்டம் போல மக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.
குவார்ட்டர் 5 ரூபாயும், ஆப் 10 ரூபாயும், புல் 20 ரூபாயும் அதிகரித்துள்ளது. எல்லா வகையான பீர் பாட்டில் விலையும் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒரு சில பிராண்டுகளின் ஆப் பாட்டில் விலையை 15 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறார்கள்.
இந்த விலை உயர்வு நேற்றே அமலுக்கு வந்துவிட்டது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும். பீர் விற்பனை மூலம் மட்டும் ரூ.180 கோடி கிடைக்கும்.
டாஸ்மாக் கடைகளில் தகராறு
முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென மதுபானங்களின் விலையை உயர்த்தியதால், நேற்று பல டாஸ்மாக் கடைகளில் கடைக்காரர்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே லடாய் ஏற்பட்டது. பழைய விலையை நினைத்துக்கொண்டே, கையில் சரியான பணத்துடன் வந்த குடிமகன்கள், "சரி, இப்ப கொடுய்யா... மீதிய நாளைக்கு தர்றேன்," என்றனர்.
ஆனால் கடைப் பணியாளர்கள் தர மறுத்துவிட்டனர். கையோடு சரக்கு வாங்கிக் கொண்டு போக முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏன் சரக்கு விலையை உயர்த்தினீர்கள்? என்று குடிமகன்கள் தகராறு செய்தனர். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் பல டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் தகராறு செய்வதும், அதை வேடிக்கை பார்க்க மக்கள் கூடுவதுமாக ஏக கலாட்டா.
'அநியாய விலை உயர்வு'
மதுபானம் விலை உயர்வு பற்றி குடிகன்கள் சிலர் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளிலும், 'பார்'களிலும் ஏற்கனவே அதிக விலைக்கு விற்கிறார்கள். இந்த நிலையில் திடீரென மதுபானங்களின் விலையை உயர்த்தி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் பட்ஜெட்டில் துண்டு விழுமே... மற்ற எல்லா பொருட்களுக்கான விலையை உயர்த்தும்போதும் முன்கூட்டியே அறிவிக்கிறார்கள். ஆனால், மதுபாட்டில்களின் விலையை மட்டும் எந்த அறிவிப்பும் இல்லாமல் உயர்த்திவிடுகிறார்கள்'' என்று வேதனையோடு தெரிவித்தனர்.
மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
இதற்கிடையே, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.) மாநிலத் தலைவர் பி.எஸ்.சவுந்திரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாநிலம் முழுவதும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகுதான், மதுபான விலை உயர்வு பற்றிய தகவல் டாஸ்மாக் கடைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், காலையில் இருந்து விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களுக்கு, புதிய விலைப்படி பணம் (விற்பனைத் தொகை) செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காலையில் இருந்து பழைய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களுக்கு புதிய விலையின்படி பணம் கோருவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது, பணியாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
ஆகவே, இன்று (நேற்று) விற்பனை செய்யப்பட்ட மொத்த மதுபாட்டில்களுக்கும், புதிய விலையின்படி விற்பனைத் தொகை கோருவதை டாஸ்மாக் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications