சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
சென்னை: சிகரெட் மீதான வாட் வரியை தமிழக அரசு 20 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் சிகரெட்களின் விலையை ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தவுள்ளன. இதன் காரணமாக சிகரெட்களை மொத்த வியாபாரிகள் பதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் சிகரெட் கிடைக்காமல் புகையாளர்கள் 'அவதி'க்குள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு சமீபத்தில் சில பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது. அதில் சிகரெட் மீதான வாட் வரியும் ஒன்று. இந்த வரியை 12.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அரசு உயர்த்தி விட்டது.
இதனால் சிகரெட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை சில இடங்களில் அமல்படுத்தியுள்ளனர். சில இடங்களில் அமல்படுத்தவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மொத்த வியாபாரிகள் சிகரெட் விற்பனையை அவர்களாகவே தடுத்து வைத்துள்ளனர்.
புதிய விலை பொறிக்கப்பட்ட பாக்கெட்கள் வந்ததும் சிகரெட்டை விற்கலாம் என்ற திட்டத்தில் அவர்கள் உள்ளதால் சில்லறை வியாபாரிகளுக்கு சிகரெட் விற்கப்படாமல் உள்ளது.
இதனால் சிகரெட் பற்றாக்குறை சென்னையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புகை பிடிப்பாளர்கள் சிக்கித் தவிப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் சில கடைகளில் அவர்களாகவே விலையை ஏற்றி வைத்து விற்க ஆரம்பித்துள்ளனர்.
என்ன விலை வைத்தால் என்ன, அந்த 'சனியனை' வாங்கி இழுப்பதை புகை பிடிப்பாளர்கள் நிறுத்துவதாக இல்லை.












Click it and Unblock the Notifications