பணத்திலேயே குறியாய் இருக்கும் இலங்கை அரசு: ரணில் விக்ரமசிங்கே குற்றச்சாட்டு
கொழும்பு: இலங்கை அரசு பணம் சம்பாதிப்பதில் தான் குறியாய் இருப்பதாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசு இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது. அதற்காக இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவித்து, அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று தமிழர்கள் உள்பட பல நாட்டவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜபக்சே அரசு பணத்திலேயே குறியாய் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அக்குரனை பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரணில் கூறியதாவது,
ஆளுங்கட்சியினர் மக்கள் நலனை விட பணம் சம்பாதிப்பதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். நாட்டிற்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் குரல் கொடுக்கும் அனைவரும் உண்மையிலேயே பற்றுடையவர்கள் அல்ல. அவர்கள் சுயநலவாத அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சிறு பகுதியை மக்கள் நலனுக்காகவும், பெரும் பகுதியை சொந்த தேவைக்காகவும் பயன்படுத்தும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications