ஹோட்டல் அபகரிப்பு புகார்: முன்ஜாமீன் கோரும் மாஜி மந்திரி நேரு

திருச்சி பஸ் நிலையம் அருகே நாமக்கல்லை சேர்ந்த டாக்டர்.கதிர்வேல் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்த ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேரு, அவருடைய தம்பி ராமஜெயம், திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் ரவுடிகளை வைத்து மிரட்டியும், ஹோட்டல் ஊழியர்களை அடித்து விரட்டிவிட்டு ஹோட்டலை பறித்துக்கொண்டதாக, டாக்டர் கதிர்வேல் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் புகார் குறித்து திருச்சி நகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் நேரு, அன்பழகன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்,
ஏற்கனவே இது போன்று ஒரு புகாரை கதிர்வேல் போலீசில் கொடுத்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று கூறி முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போது அதே குற்றச்சாட்டுக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே எங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். சமூகத்தில் மதிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
