தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன்கள் விலை 'விர்'!
தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன் திரேஸ்புரத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகினர். அவர்களது உடலை மீட்கும் பணி நடந்ததில் மீனவர்கள் 3 நாட்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதில் விசைப்படகு உரி்மையாளர்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் பார்த்தீபன் மற்றும் செயலாளர் ஜேசு ஆகிய இருவரையும் இனிமேல் எந்த விசைப்படகிலும் பணியமர்த்தக் கூடாது என்றும் மீன்பிடி துறைமுகத்தில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் பொது பஞ்சாயத்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 4-வது நாளாக நேற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 290 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்வரத்து குறைந்துவிட்டது. பிற படகுகள் மூலம் பிடிபடும் மீன்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யவே போதவில்லை என்பதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தொடர் வேலை நிறுத்தத்தால் தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ. 400-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.500-க்கும், கிலோ ரூ.200-க்கு விற்ற ஊளு மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது. இதனால் மீன் பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications