அத்வானியுடன் ஹினா சந்திப்பு: 'கிருஷ்ணா' பயத்தில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை!

Subscribe to Oneindia Tamil

Hina Rabbani
டெல்லி: இந்திய வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா இன்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார்.

ஆனால், நேற்று காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு அமைப்பினரை ஹினா சந்தித்துப் பேசியது இந்தப் பேச்சுவார்த்தைகளி்ல் கறையாகப் படிந்துவிட்டது. பிரிவினைவாதத் தலைவர்களை ஹினா சந்தித்ததற்கு இந்தியா எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இன்றைய சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது, காஷ்மீர் பிரச்சனை, தீவிரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்து கிருஷ்ணாவும் ஹினாவும் பேச்சு நடத்தினர்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள், அமைப்புகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது.

முன்னதாக வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலாளர் சல்மான் பஷீரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஹினா-கிருஷ்ணா பேச்சுவார்த்தையால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றே பெரும்பாலான சர்வதேச பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கிருஷ்ணா-ஹினா கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளிக்கலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்திய வெளியுறவுத்துறை ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. கூட்டுப் பேட்டிக்கு கிருஷ்ணா தயாராக இருந்தாலும் அதிகாரிகள் தயாராக இல்லை.

பாகிஸ்தானின் மிக இளம் பெண் அமைச்சரான ஹினாவுக்கே (வயது 34) இந்தப் பேட்டியால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைக்கும் என இந்திய அதிகாரிகள் அஞ்சியதாகத் தெரிகிறது. மன்மோகன் சிங்கின் அமைச்சரவையிலேயே மிக வயதான அமைச்சர் கிருஷ்ணா தான் (வயது 79) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச விவகாரங்களில் சொதப்பலுக்கு பேர் போனவர் கிருஷ்ணா என்பதும், இந்தத் துறையை அவர் சரியாகக் கையாளவில்லை என்பதும், துறையை அதிகாரிகளே முன்னின்று நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏதாவது கேள்விக்கு கிருஷ்ணா குழப்பமான பதிலைத் தந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் உள்ளது. (ஐ.நா. சபையில் போர்ச்சுகீஸ் நாட்டின் அறிக்கையை படித்தவர் கிருஷ்ணா என்பது நினைவுகூறத்தக்கது).

மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் கிருஷ்ணா நடத்திய கூட்டு நிருபர்கள் சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடு இல்லை என்று கூறி குண்டைத் தூக்கிப் போட்டார். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி ஆப்கானிஸ்தானை ஒட்டி உள்ளதைக் கூட அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஹினா தனது நிலையை விளக்குவதில் பேர் போனவர் என்பதும், அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளிலேயே அவர் தனது திறமையைக் காட்டியவர் என்பதாலும் கிருஷ்ணாவை நினைத்து இந்திய அதிகாரிகள் மேலும் அச்சத்தில் இருந்தனர்.

வெளியுறவுத்துறைக்கான பொறுப்பை ஹினா சமீபத்தில் தான் ஏற்றார் என்றாலும், சர்வதேச விவகாரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருவதோடு, எல்லா பிரச்சனைகளிலும் மிகத் தெளிவாக உள்ளார் என்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகிய அதிகாரிகள் தான் வெளியுறவுத்துறையை நடத்துகிறார்களே தவிர, கிருஷ்ணா பெயரளவுக்கே அமைச்சராக உள்ளார்.

ஆனாலும் கூட்டாக பேட்டி அளிப்பதில் கிருஷ்ணா மிகவும் தீவிரமாக இருந்ததால், இன்று ஹினாவை சந்தித்த பின் இருவரும் நிருபர்களை சந்தித்தனர்.

அத்வானியுடன் ஹினா சந்திப்பு:

இந் நிலையில் ஹினா இன்று காலை திடீரென பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவரது டெல்லி இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.

பின்னர் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்கவுள்ள ஹினா, காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சநதிக்க திட்டமிட்டுள்ளார்.

யுஎஸ்-வீட்டுக் காவலில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்:

இதற்கிடையே காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் குலாம் நபி ஃபய்யை சிறையில் இருந்து விடுதலை செய்து வீட்டுக் காவலில் வைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது.

காஷ்மீரில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ஃபய் அந்நாட்டு போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்காக குறிப்பாக அதன் உளவுத்துறை ஐஎஸ்ஐக்காக பணியாற்றியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்ட அமெரிக்காவின் அலெக்ஸாண்டிரா மாவட்ட நீதிமன்றம், அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

விர்ஜீனியாவில் உள்ள வீட்டில் தங்கியிருக்குமாறு ஃபய்யை கேட்டுக்கொண்ட நீதிமன்றம், அவரும். அவரது மனைவியும் தங்களது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சனை-அனைத்துக் கட்சிக் கூட்டம்-ப.சிதம்பரம்:

இதற்கிடையே காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு அறிக்கை அளித்த பிறகு,அது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தக் குழுவில் குழுவில் பிரபல பத்திரிகையாளர் திலீப் பட்காவோங்கர், கல்வியாளர் ராதா குமார், முன்னால் மத்திய தலைமை தகவல் ஆணையர் எம்.எம். அன்சாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு 6 வாரங்களுக்கு முன் அதன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+