விழுப்புரத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாணவர் இறந்ததற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களைத் தடியால் அடித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. எஸ்.கனகராஜ், மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மாணவர் பிரபாகரன் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் படிப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த புதன்கிழமை அன்று வகுப்பில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததால் குணசேகரன் என்ற ஆசிரியர் அவரை கடுமையாக அடித்துள்ளார். இதில் மாணவர் பிரபாகரன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வாகனத்தில் ஏற்றும்போது பரிதாபமாக உயிர் இழந்தார்.
தகவல் அறிந்ததும் சக மாணவர்கள், மாணவரின் இறப்புக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் பிரபாகரன் மரணத்திற்கு காரணமான குணசேகரனை கைது செய்யாமல் ஜனநாயக ரீதியாக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
எனவே, தமிழக அரசு இறந்த மாணவர் பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதுடன், ஆசிரியர் குணசேகரன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications