ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Lorries
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்டு 18-ந் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் சேலத்தில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் நல்லதம்பி, மகாராஷ்டிரா மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ் கே.கவுலி, மகாராஷ்டிரா மாநில சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.எல்.குப்தா, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

தென் மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில், லாரிகளுக்கு விதிக்கப்படும் சுங்கக் கட்டணம் மிக அபரிமிதமான அளவு உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசு இந்த, சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது தவிர டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், லாரி டயர் விலை உயர்வை குறைக்க வேண்டும், லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம்.

இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதி மொழிகளை வழங்கியது. எழுத்துப்பூர்வமாக அளித்த அந்த உறுதிமொழிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

டிஆர் பாலுதான் காரணம்

இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் மத்திய மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலுதான். கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை, டி.ஆர்.பாலு மத்திய மந்திரியாக இருந்த போது மாற்றி அமைத்துவிட்டார். அதன் மூலம் சில தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் இன்று இந்த அளவு சுங்கக்கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.

இந்த விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இணையானது. இதை சி.பி.ஐ. கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

எனவே அபரிமிதமான அளவில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், சுங்க கட்டண விகிதங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும். இந்த போராட்டம் தென் இந்திய அளவில் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அதோடு மகாராஷ்டிரா மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

24 லட்சம் லாரிகள் ஓடாது

தென் மாநிலங்களில் 16 லட்சம் லாரிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 லட்சம் லாரிகளும் ஆக மொத்தம் 24 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும். அதனால் அந்த துறைமுகங்கள் மூடப்படும்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மத்திய அரசுக்கு தினமும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு சராசரியாக ஆயிரம் கோடி ரூபாய் வரை தினமும் நஷ்டம் ஏற்படும்.

அகில இந்திய அளவில்

இது காலவரையற்ற போராட்டமாகும். 10 நாட்களுக்குள் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துபேசி, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அகில இந்திய அளவில் விரிவுபடுத்தப்படும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா லாரி உரிமையாளர்களின் பாதிப்பை உணர்ந்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசுடன் பேசி சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ் கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+