திருப்பூர் ஸ்ட்ரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு - முதல்வர் நடவடிக்கை எதிரொலி
திருப்பூர்: திருப்பூரில் ஆகஸ்ட் 4 ம் தேதி நடக்க இருந்த கடையடைப்பு, பொது வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், கடந்த 22ம் தேதி, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற சர்வ கட்சி கூட்டம் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, தேமுதிக, மதிமுக, பார்வர்ட் பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திருப்பூர் சாயக்கழிவுநீர் பிரச்சனையால் பனியன் தொழில் நெருக்கடிக்குள்ளாகி வருவதையும், இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரிடையாகத் தலையிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 4 ம் தேதி பொது வேலைநிறுத்தம், கடையடைப்பு நடத்தவும் அனைத்து கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனே திருப்பூர் விவகாரத்தில் ஆர்வமுடன் கேட்டு சாய ஆலை அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், நியாயமான கோரிக்கைகளில் சிலவற்றை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் காரணமாக, ஆகஸ்ட் 4 ம் தேதி நடக்க இருந்த பொது வேலைநிறுத்தம், கடையடைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
