கயானாவில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்-பயணிகள் பத்திரம்!
ஜார்ஜ்டவுன், கயானா: தென் அமெரிக்காவின் கயானாவில் ஒரு பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது. இருப்பினும் விமானியின் சாதுரியம் காரணமாக ஒரு பயணிக்கும் ஆபத்து ஏற்படாமல் அத்தனை பேரும் பத்திரமாக தப்பியுள்ளனர்.
நியூயார்க்கிலிருந்து கயானாவின் ஜார்ஜ்டவுனுக்கு ஒரு விமானம் வந்தது. போயிங் விமானமான அது ரன்வேயில் இறங்கியபோது சறுக்கிச் சென்று வேலியில் மோதியது. இதில் விமானம் சரி பாதியாக உடைந்தது. மேலும் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழும் வகையில் அது அபாயகரமாக சென்றது. இருப்பினும் விமானி மிகவும் திறமையாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி விட்டார். இதனால் விமானத்தில் இருந்த 163 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
விமானம் உடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கயானா நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் லெஸ்லி ராமசாமி கூறுகையில், விமானம் உடைந்தபோதிலும் அத்தனை பேரும் பத்திரமாக தப்பியுள்ளனர். அனைவரும் அதிர்ஷ்டக்காரர்கள். 30 பேர் மட்டும் லேசான காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 3 பேருக்கு மட்டுமே கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றார்.
விபத்துக்குள்ளான விமானம் நியூயார்க்கிலிருந்து கயானா வழியாக டிரினிடாட் சென்று கொண்டிருந்தது. கயானாவில் இறங்கியபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டு விட்டது.


Click it and Unblock the Notifications
