For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மு.க.அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3, 500 கோடிக்கு மேல் சொத்து: தெகல்கா கூறுகிறது

By Siva
Google Oneindia Tamil News

Azhagiri
சென்னை: மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான முக அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெகல்கா அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அழகிரி கடந்த 2009-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது.

நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன.

இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம், 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம், 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள், ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி, 85 கிராம் தங்கம், ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி, ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.

சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முக அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை.

விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி.

அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், முக அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.

அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம்.

48. 42 ஏக்கர் விவசாய நிலம், கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட், சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட், சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட், மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட், மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம், கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம், மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.

அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார்.

கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்தில் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.

அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார். தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜேஏகே கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்டி, ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி. சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஆபரேட்டரான ஜேஏகே கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது.

கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர்.

அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்பிராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
Tehelka has published an article saying that central minister Azhagiri has assets worth more than Rs. 3,500 crore in benami names. Azhagiri has declared assets worth Rs. 133.65 crore after the 2009 Lok Sabha elections. The article also mentions that he has dreamt of leading DMK after Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X