இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்
சென்னை: நமக்குப் பின்னால் சுதந்திரமடைந்த நாடுகள் எல்லாம் இன்று வறுமையை ஒழித்து விட்டன. ஆனால் இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா தனது 65வது சுதந்திர நாளை இன்று கொண்டாடுகிறது. ஒரு நாட்டின் சுதந்திர தினத்தை அந்த நாட்டு மக்கள் தாங்களே முன்வந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். ஆனால் இன்று இந்தியாவின் பிரதமர் அவர்களும், மாநிலங்களின் முதலமைச்சர்களும், தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றும் நிலைமைதான் உள்ளது.
மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும், சுதந்திர தின விழாக்களிலும் ஏராளமான போலீசாரை பாதுகாப்புக்கு ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளுமே காரணம்.
சுதந்திரம் கிடைத்து 65வது ஆண்டு பிறந்தாலும், இன்னும் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் வறுமையில் வாடுகிறார்கள். இந்தியாவிற்குப் பின் சுதந்திரம் அடைந்த சீனா, கொரியா போன்ற கிழக்கு திசை நாடுகள் வறுமையை ஒழித்து விட்டன. இந்தியாவில் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழையாகியும் வருகிறார்கள். ஆகவே பொருளாதார கொள்கையில் புதிய மாற்றம் தேவைப்படுகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கென அரசுகள் மேற்கொள்ளும் நலத் திட்டங்களும், லஞ்சம், ஊழல் காரணமாக அந்த மக்களுக்கு சரியாக சென்றடைவது இல்லை. சமூகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லையே என்ற ஏக்கம் மக்களிடையே உள்ளது.
எனவே நாட்டு மக்கள் நலம் விரும்பும் கட்சி சார்பற்ற பொதுநல வாதிகள் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிதண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.
இத்தகைய மக்கள் பிரச்னைகளை முன்னமே உணர்ந்து, அவற்றை போக்க பாடுபடுதற்காகவே தே.மு.தி.க. 6 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று முதன் முதலில் தே.மு.தி.க.தான் மூல முழக்கமாக மக்கள் எண்ணத்தை பிரதிபலித்தது. இன்று இந்தியா முழுவதும் இது எதிரொலிக்கிறது.
ஒளிமயமான எதிர்காலம் இனியாவது உருவாக இந்த சுதந்திர நாளில் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications