'பாடி லாங்வேஜ்': ராஜினாமா செய்ய தயாரா?-அமைச்சருக்கு துரைமுருகன் சவால்!
சென்னை: சட்டசபையில் நான் கேலி செய்கிற மாதிரியோ, உடலை வளைத்தோ, கையை, காலை ஆட்டியோ, பிறர் உள்ளம் புண்படுகின்ற அளவுக்கு செய்திருந்தால், அதை டிவியிலே காட்டினால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதே போல இதை நிரூபிக்கத் தவறினால் அமைச்சர் முனுசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்று திமுக மூத்த உறுப்பினர் துரைமுருகன் சவால் விட்டார்.
சட்டசபையில் துரைமுருகன் தனது பாடி லாங்வேஜ் மூலம் தன்னைக் கிண்டல் செய்வதாக அமைச்சர் முனுசாமி புகார் செய்தார். இதையடுத்து எழுந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எழுந்து, அவரது கட்சித் தலைவரும் இப்படித்தான் செய்வார். தலைவரைப் போலவே தொண்டர்களும் என்று கூறினார். இதனால் திமுகவினர் பெரும் கொதிப்படைந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அதிமுக உறுப்பினர் வளர்மதியும் கடுமையாக விமர்சனம் செய்ததால், வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபைக்கு வெளியே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேள்வி நேரம் நடைபெறுகிறபோது, கேள்விக் கேட்கக்கூடிய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தேமுதிகவாக இருந்தாலும், அதைப்போல அதிமுகவில் கூட்டணியில் உள்ள இன்னும் சில கட்சிகளும், கடந்த திமுக ஆட்சியை குற்றம் சொல்லி பேசிய பேச்சு சட்டசபை மரபுப்படி தவறாகும்.
கேள்வி நேரத்தில் குற்றங்களையோ, குறைகளையோ சொல்லக்கூடாது என்பது மரபாகும். இந்த சூழ்நிலையில் சபாநாயகரின் போக்கை கண்டித்து திமுக சார்பில் நாங்கள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.
துரைமுருகன் கூறுகையில், சட்டசபையில் நடப்பதை பல கேமராக்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நான் கேலி செய்கிற மாதிரியோ, உடலை வளைத்தோ, கையை, காலை ஆட்டியோ, பிறர் உள்ளம் புண்படுகின்ற அளவுக்கு செய்திருந்தால், அதை டிவியிலே காட்டினால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
ஆனால் அப்படியில்லாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு சொன்னாரே அந்த அமைச்சர், இதனை நிரூபிக்கத் தவறினால் அவருடைய பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்ற சவாலை நான் விடத் தயாராக இருக்கிறேன்.
நாங்கள் உள்ளே உட்காருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் எப்படியாவது இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகவே நாங்கள் இதனை கருதுகிறோம் என்றார்.
திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை:
சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி புகார் கூறியதும் அதைத் தொடர்ந்து எழுந்த சூடான விவதாத்தைத் தொடர்ந்து, இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் அவசரமாக கூடி ஆலோசிக்கின்றனர்.
இதற்கிடையே, துரைமுருகன் கிண்டல் செய்தது உண்மையானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இதனால் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications