அன்னா முரண்டு பிடித்ததால் கைது செய்யப்பட்டார்-மத்திய அரசு; ராகுலுடன் ப.சிதம்பரம், பிரணாப் ஆலோசனை

இன்று காலை தனது ஆதரவாளர்களோடு காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கவிருந்தார் அன்னா. ஆனால் அவரை காலையிலேயே வீட்டுக்குச் சென்று போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி விட்டனர்.
அவருடன் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட ஐந்து முக்கிய ஆதரவாளர்களும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் கைதை மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறையை நிர்வகிக்கும் மத்திய உள்துறையின் செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தடை உத்தரவுகளை மீறுவதில் உறுதியாக இருந்ததால், பிடிவாதமாக இருந்ததால் அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டார் என்றார்.
தற்போது அன்னா ஹஸாரே விவகாரம் சூடுபிடித்துள்ளதால் கைதுக்கான தேவை மற்றும் அவசியம் குறித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறையை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாம். அந்த அறிக்கை வந்தவுடன், அதைஅடிப்படையாக வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.
ராகுலுடன் ப.சிதம்பரம், பிரணாப் ஆலோசனை
இதற்கிடையே, அன்னா ஹஸாரே விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியுடன் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை எப்படிக் கையாளுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications