அன்னா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகத்தில் மாணவர்கள் மனு
வாஷிங்டன்: அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கோரிக்கை மனு கொடுத்தனர்.
அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களிடையே அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில் அன்னாவின் டெல்லி போராட்டத்துக்குஆதரவு தெரிவித்து 35 இந்திய மாணவர்கள் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று அன்னாவின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக கூறி மனு ஒன்றைக் கொடுத்தனர்.
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்த கடித மனுவில், நாங்கள் இந்தியாவில் வசிக்காத இந்திய குடிமக்கள். மத்தியஅரசு தற்போது அன்னா ஹஸாரே விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க முயன்றால், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதைத் தடுக்க முயன்றால், இந்திய குடிமக்களுக்கு அரசியல் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை நசுக்க முயன்றால், இந்திய அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்கக் கூடாது. உடனடியாக அது பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அசுதோஷ் குப்தா என்ற மாணவர் கூறுகையில், இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழலைப் பார்த்து நாடே வெட்கித் தலைகுணிந்து நிற்கிறது. நாங்கள் எங்களது தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் கூட ஒரு இந்தியராக எங்களது பொறுப்புகளை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் நாங்களும் இணைந்துள்ளோம் என்றார்.
இந்திய தூதரகம் முன்பு அமைதியான முறையில் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications