சங்கரநாராயண கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பரிகார பூஜை!

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலுக்கு நேற்று காலை 10 மணி அளவில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். சங்கரநாராயண சாமி சன்னதி கன்னி மூலையில் உள்ள சர்ப்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் இருவரும் 51 விளக்குகள் ஏற்றினர். இந்த சிறப்பு பூஜை மதியம் 12 மணி வரை நடந்தது.
பின்னர் 12 மணிக்கு மேல் ராகுகாலத்தில் சங்கரலிங்கசாமி சன்னதிக்கு வந்தனர். அங்கு லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சங்கரநாராயண சாமி சன்னதியில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்கள் கோமதி அம்பாள் சன்னதிக்கு வந்தனர். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பின்னர் கோமதி அம்பாள் சன்னதி முன்னுள்ள ஸ்ரீசக்கரத்தில் உட்கார்ந்து பயபக்தியுடன் அம்பாளை வேண்டினார்கள். இங்கு பூஜைகள் செய்வதன் மூலம் வழக்கு, தண்டனை, சிறை போன்ற சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ஆண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதேபோல் ராகு காலத்தில் சங்கரலிங்க சுவாமிக்கு ருத்ர பூஜை செய்வது மூலம் உக்கிரத்தில் இருக்கும் சிவபெருமானை குளிரவைத்து கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். மேலும் ஆடிதபசை முன்னிட்டு 11 நாட்கள் தபசு இருந்த அம்பாளை வேண்டினால் நினைத்தது நிறைவேறும்.
கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரத்தில் உட்கார்ந்து வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நில மோசடி வழக்கில் முன் ஜாமீனில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் நேரு, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சங்கரநாராயண சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications