திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
டெல்லி: திஹார் சிறை மற்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று அதிகாலை வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அன்னா ஆதரவாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திஹார் சிறையில் உள்ள அன்னா ஹஸாரே இன்று மதியம் 3.30 மணி அளவில் அங்கிருந்து வெளியேறவிருக்கிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க ஒப்புக் கொண்டு சிறையை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் இன்று காலை திஹார் சிறையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் பரிசோதனை நடத்தினர்.
அன்னா ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சிறைக்குள் செல்வதைப் பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். யாரும் குண்டு எதுவும் வைத்துவிட்டார்களா என்று நினைத்து பீதியடைந்தனர்.
அன்னா சிறையை விட்டு வெளியேறும்போது ஏதாவது சந்தேகத்திற்குரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனால் தான் சோதனை நடத்தினோம் என்று நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் தெரிவித்தார்.
இதே போன்று அன்னா உண்ணாவிரதம் இருக்கவிருக்கும் ராம்லீலா மைதானத்திலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இன்று மதியம் அன்னா அங்கு வருவதையொட்டி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications