தனியார் கல்லூரியில் மாணவரின் மர்மச்சாவு குறித்து விசாரிக்க மாணவர்கள் போராட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்த கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் அன்னதாசன் என்ற மாணவர் படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அன்று காலை விடுதியிலிருந்து வகுப்புக்குச் சென்றார். ஆனால், அன்று மதியமே தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதையடுத்து, அன்னதாசனின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி முன் கூடி திடீர் பேராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால் அன்னதாசன் மரணம் குறித்து முறையாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செயய்வில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநிலத் துணைத் தலைவர் கரிகாலன், மாநில துணை செயலாளர் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணத்தமிழன் மற்றும் கோகுல கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் அருணன் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications