நில அபகரிப்பு வழக்கில் மதுரை தி.மு.க., கவுன்சிலர் கைது: 13 பேருக்கு வலை
மதுரை: நில அபகரிப்பு வழக்கில் மதுரை தி.மு.க., கவுன்சிலர் மலைச்சாமி அவரது நண்பருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தி.மு.க., ஆட்சி மாறி, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுமக்களிடம் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், நில அபகரிப்பு, ரவுடியிசம், கொலை, கொள்ளை, மோசடி போன்ற பல்வேறு புகார்களில் சிக்கியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக நிலமோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்ட உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர், மிரட்டி தனது நிலத்தை மதுரை 52வது வார்டு தி.மு.க., செயலாளரும், கவுன்சிலருமான மலைச்சாமி உள்பட 15 பேர் சேர்ந்து அபகரித்ததாக மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து தி.மு.க., கவுன்சிலர் மலைச்சாமி உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நிலஅபகரிப்பு புகாரில் தி.மு.க., கவுன்சிலர் மலைச்சாமி, அவரது நண்பர் சாமிநாதன் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் 13 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications