வள்ளியூர் அருகே சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட காப்பக நிறுவனர்
வள்ளியூர்: வள்ளியூர் அருகே காப்பகத்தில் இருந்த 14 வயது சிறுவனுடன் அந்த காப்பகத்தின் நிறுவனரான பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் வந்ததையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரத்தை அடுத்த சின்னம்மாள்புரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் உள்ளனர். இந்த காப்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஜானதன் ராபின்சன் என்பவர் நடத்தி வருகிறார். அவர் கொடுக்கும் நிதி மூலம் இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடை கொடுக்கப்படுகின்றனவாம்.
மேலும் அன்றாட செலவுகளுக்கும் மாணவ, மாணவியரின் படிப்புக்கும் இவர் வழங்கும் நிதியிலேயே செலவு செய்யப்படுகிறது. ஜானதன் ராபின்சன் அவ்வப்போது இந்தியாவுக்கு வருவாராம். அப்போது இந்த காப்பத்தில் இருந்து ஏதாவது ஒரு சிறுவனை அழைத்துச் சென்று அவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இந்த நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜானதன் ராபின்சன் இந்த காப்பகத்திற்கு வந்தார். காப்பகத்தில் இருந்த 14 வயது சிறுவன் ரவியை அவர் அழைத்து சென்றுள்ளார். ஏப்ரல் 13-ம் தேதி ரவியை டெல்லிக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் வைத்து அவனிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து ஒரிசா, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அங்கும் அவனிடம் தவறாக நடந்தாராம்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மூலம் இந்த விவகாரம் பெங்களூரில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கு தெரிய வந்தது. அந்த அமைப்பினர் இது பற்றிய தகவல்களை சேகரித்து சிறுவன் ரவியை மீட்டனர். பின்பு இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த சிகுராம் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பக நிர்வாகி ஜானதன் ராபின்சனை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் இப்போது ஜெர்மனியில் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு வள்ளியூரில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பாகம் மூலம் குழந்தைகள் கடத்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். காப்பகமும் மூடப்பட்டது. இந்த நிலையில் ஒரு காப்பகம் செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளது வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications