கூடங்குளம் அணுசக்தி நிலையத்தை மூடக் கோரி பெண்கள் போராட்டம்!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட கடலோர பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் பலர் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆட்சியரை முற்றுகையிட்ட பெண்கள், சில நாட்களாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து அடிக்கடி பெரும் சப்தம் கேட்பதாகவும், அணு மின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெண்கள் சிலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலில் முன்புபோல மீன்கள் சரிவர கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் சிலர் கூறினர்.
மீனவப் பிரதிநிதிகள் பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு அணுமின்நிலையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தினர். மீனவர்களின் கோரிக்கையை கேட்ட ஆட்சியர் செல்வராஜ், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அரசுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என்றார்.
பின்னர் இடிந்தகரை ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில், "ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா என்ற இடத்தில் அணு உலையில் இருந்து வெளியாகிகொண்டிருக்கும் கதிர்வீச்சு காரணமாக அந்த பகுதியில் இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள கிராம மக்களை அப்புறப்படுத்தும் எண்ணத்தில் அரசு இருப்பதாக தெரிகிறது.
அணு உலை திட்டத்தால் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வை புரிந்து கொண்டு அரசு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்," என்று மனுவில் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications