திமுகவினருக்கு தை 1 தமிழ்ப் புத்தாண்டு: கருணாநிதி
சென்னை: திமுகவினரைப் பொருத்தவரை, தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது.
இது துறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிப் பெற்று பொறுப்புக்கு வந்தது முதல், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
23.1.2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கவர்னர் தனது உரையிலே செய்த அறிவிப்பில், "பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921ம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு "தனி ஆண்டு'' தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே "தமிழ் ஆண்டு'' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, கருணாநிதி ஏற்றுக்கொண்டு, 1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார்.
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்'' என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல் முயற்சிக்கு தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற -செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள்.
29.1.2008 அன்று தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன்வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1.2.2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ்.ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்டு சார்பில் வை.சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு.க. ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது இருக்கலாமா என்று அதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவையிலே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பா.ஜ.க. அவசர அவசரமாக வரவேற்றுள்ளது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆனாலும் மசோதாவை அவையிலேயே இரண்டு கம்யூனிஸ்டுகளும் எதிர்த்தார்கள் என்ற தகவலை பத்திரிகையாளர்கள், என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்து கேட்டபோது, அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று பதில் கூறினேன்.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மசோதாவின் மீது பேசிய ஜெயலலிதா; தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம்; தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை பொது மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டது என்றும், சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அந்தச் சட்டம் அமைந்துள்ளது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.
அவரின் இந்தக் கருத்தைத் தமிழ்நாட்டு மக்களே சீர்தூக்கிப் பார்த்து என்ன உண்மை என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
மேலும் ஜெயலலிதா தனது பேரவை உரையிலே, தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய சட்டம் யாருக்கும் பயன் அளிக்காத ஒன்று என்றும், அந்தச் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கருணாநிதியின் "துதிபாடிகள்'' அனைவரும் அதனைப் போற்றினர் என்றும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகத்தான் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டதென்றும் பேசியிருக்கிறார்.
"துதிபாடிகள்'' என்று அம்மையாரால் வர்ணிக்கப்படும் பேறு பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? நமது பேராசிரியர் அன்பழகனார், அண்ணா பல்கலைக்கழகத்திலும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக இருந்து பெரும்புகழ் பெற்ற வ.செ.குழந்தைசாமி, முனைவர் தமிழண்ணல், முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், முனைவர் அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராசன், முனைவர் இரா.நாகசாமி, தவத்திரு ஊரன் அடிகள், அமைச்சராக இருந்த துரைமுருகன், மத்திய இணை அமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன், பேராசிரியர் கண.சிற்சபேசன், முனைவர் அ.அறிவொளி, முனைவர் சுதா சேஷையன், இலங்கை இ.ஜெயராஜ், முனைவர் சரசுவதி ராமநாதன், வழக்கறிஞர் த.ராமலிங்கம், பேராசிரியர் தி.ராசகோபாலன், முனைவர் இராம.சவுந்தரவல்லி, முனைவர் இரா.செல்வ கணபதி, புலவர் கோ.சாரங்கபாணி ஆகியோர் தான்!
பேரவையிலே ஜெயலலிதா "நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க.வின் வேலை'' என்று சொல்லியிருக்கிறார். அது தவறு; "தி.மு.க. எதைச் செய்திருந்தாலும், அதைச் சீரழிப்பதுதான் அ.தி.மு.க.வின் வேலை'' என்பதே சரியாகும்!
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்தவரையில் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்.
அன்றையதினம் வாழ்விலோர் திருவிழா என்பார்களே, அதைப்போல தமிழகத்தின் ஏழையெளிய மக்களுக்கு - தமிழர்களாகப் பிறந்த மக்களுக்கு - திராவிடச் சமுதாயத்தை தனது இனமென தலை நிமிர்ந்து கூறுகின்ற மக்களுக்கு ஒரு இனிய விழா -இதய விழா - எழுச்சி விழா என்பதை மனதிலே கொண்டு அந்நாளை உவகைப் பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications