நில அபகரிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு- 'அன்பில்' பெரியசாமி கைது

துறையூரைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக தனது நிலத்தை நேரு மிரட்டி, அடித்து உதைத்து தன்னிடம் இருந்து பறித்துக் கொண்டதாக சீனிவாசன் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் கே.என். நேரு, சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜுலு உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
நேருவுடன் திமுக முன்னாள் எம்எல்ஏ 'அன்பில்' பெரியசாமியும் கைது செய்யப்பட்டார். லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தரராஜூலு, மாமுண்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதே வழக்கில் நேருவின் உறவினர் ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோகிருக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களும் விரைவில் கைதாவார்கள் என்று தெரிகிறது.
துணை மேயர் அன்பழகன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் மீது இது தவிர மேலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் உறவினர் ராமஜெயம் வெளிநாடு சென்றிருக்கிறார்.
திமுகவினர் ஆர்ப்பாட்டம்:
கே.என்.நேரு கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர திமுகவினர், ஆயுத படை மைதானத்தின் கேட்டின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கே.என்.நேரு உட்பட கைதான 4 பேரும் மாஜிஸ்டிரேட் புஷ்பராணி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தக் கைது குறித்து நேரு நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் கைது செய்துள்ளார்கள். சட்டப்படி வெளியே வர வேண்டும், வருவோம் என்றார்.


Click it and Unblock the Notifications
