லோக்பாலால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது-ராகுல் காந்தி பேச்சால் லோக்சபாவில் பெரும் அமளி

லோக்பால் மசோதா தொடர்பான விவாதம் இன்று லோக்சபாவில் தொடங்கியது. ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பி்ல் பேசியபோது, அவர் குறிப்பிட்ட சில கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் குதித்தனர். இதனால் சில நிமிடங்களுக்கு ராகுல் காந்தியால் பேச முடியவில்லை. வழக்கமாக இதுபோல அமளி ஏற்பட்டால் அவை ஒத்திவைக்கப்படும்.
ஆனால் சபாநாயகர் மீராகுமார் கடுமையாக முயன்று அமளியைக் குறைக்க முயற்சித்தார். இருப்பினும் பலன் இல்லை. பின்னர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார். அவரது பேச்சின் இறுதியில் எதிர்க்கட்சியினர் சற்று அமைதி காக்கவே அவர் தொடர்ந்து தனது பேச்சை படித்து முடித்து அமர்ந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:
ஊழல் எல்லா மட்டத்திலும் உள்ளது. அதை உடனடியாக ஒழிக்க முடியாது. அப்படி ஒழிப்பதற்குத் தேவையான மந்திரக் கோல் நம்மிடம் இல்லை.
ஊழலால் கடுமையாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது. தொடர்ச்சியான செயல்பாடுகள், வலுவான அரசியல் திட்டங்கள் தேவை. அரசியல் துணிச்சல் தேவை.
அன்னா ஹஸாரே தனது போராட்டத்தின் மூலம் ஊழலுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
தற்போதைய பிரச்சினையை தீர்ப்பது என்பது இப்போது பிரச்சினை இல்லை. இது மிகப் பெரிய விவகாரம். இதற்கு நீண்ட காலத் தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
வலுவான லோக்பால் என்பது ஊழலுக்கு எதிரான போரில் ஒரு அஸ்திரமாக மட்டுமே இருக்க முடியும். லோக்பாலால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று கூற முடியாது. தொடர்ச்சியான பல்வேறபு சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்.
லோக்பால் என்பது தேர்தல் ஆணையம் போல சுயாட்சி படைத்த அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தலின்போது கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அனைவரும் உண்மையாக உழைக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை பலவீனப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார் ராகுல் காந்தி.
லோக்பால் தொடர்பாக சோனியா காந்தி குடும்பத்தினர் ஒருவர் கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி பேசுவதைக் கவனித்த பிரியங்கா
ராகுல் காந்தி இன்று லோக்சபாவில் பேசும்போது அதை பார்க்க அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் லோக்சபாவுக்கு வந்திருந்தார். பார்வையாளர் மாடத்திலிருந்து அவர் விவாதத்தைக் கவனித்தார்.
கருத்து தெரிவிக்க தாமதம் ஏன்?-ராகுல் விளக்கம்
லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்திய பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தியையும், அவரது சகோதரி பிரியங்காவையும் செய்தியாளர்கள் சூழ்ந்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
ராகுல் பேச்சு குறித்து பிரியங்காவிடம் கேட்டபோது, ராகுல் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு அகன்றார்.
லோக்பால் மசோதா குறித்து ஏன் இத்தனை நாட்களா கருத்து தெரிவிக்கவில்லை என்று ராகுலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எதையுமே பேசுவதற்கு முன்பு சற்று சிந்தித்துப் பார்க்க விரும்புபவன் நான். இந்த விஷயத்திலும் அப்படியே நடந்து கொண்டேன் என்றார்.
மேலும் லோக்பால் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications