நளினிக்குக் காட்டிய அதே கருணையை காட்ட வேண்டும்: கி.வீரமணி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை, அளிக்கப்பட்ட மூன்று பேர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை- மனித உரிமை அமைப்புகள், மனித நேயர்கள் அனைவரது (மக்கள்) சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆகும்.
கருணை மனுவை நிராகரித்தது ஏன்?:
இதனை ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு குடியரசுத் தலைவர்கள் நிராகரிக்காமல் வைத்திருந்தனர். இப்போது மூன்றாவதாக வந்துள்ளவர் (உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி) நிராகரித்து விட்டதோடு, அந்த ஆணையினை வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் அவர்களது தூக்குத் தண்டனையை நிறைவேற்றிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில், இக்கடைசி நிமிடத்தில்கூட அத்தண்டனையை நிறுத்தி, மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை வட இந்தியத் தலைவர்களாலும்கூட வற்புறுத்தப்படுகிறது. இதில் மனித நேயம் பொங்கி, மனிதாபிமான அணுகுமுறை காட்டப்படல் வேண்டும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இம்மூவரும் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். இதுவே ஓர் ஆயுள் தண்டனைக் காலமாகும். தூக்குத் தண்டனையை ஏற்பதைவிட மிகவும் கொடூரமான சித்ரவதையாகும். இதை எண்ணிப் பார்க்க ஏனோ தவறியது குடியரசுத் தலைவரின் முடிவு. இதுபற்றி காங்கிரஸ் கட்சி தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய அடிப்படையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ள நிலையில், அவர்களது கருணையும், மனிதாபிமானமும் இந்த மூவர் விஷயத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
மற்ற பல்வேறு செய்திகளில் அணுகுமுறை, முடிவுகளில் முதல்வரிடம் நாம் மாறுபட்ட நிலையிலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் முதலிய அனைவருக்கும் அவர் இப்போது முதல்வர் என்ற முறையில் கருணை காட்டுவதை- கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.
அடுத்து, சட்டரீதியாகவே இவர்கள் மூவர் விஷயத்தில் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கின் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன என்பதால், நீதிமன்றங்களிலும்கூட அரசு சார்பிலேயே ஆலோசனைகள் வழங்க இடம் உள்ளது.
எடுத்துக்காட்டாக, இந்த மன்னிப்பு- கருணை வழங்கும் விதிகள் இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட்டதே, பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகள்- விதிகள்- அங்குள்ள நீதிமுறைகளின் அடிப்படையில் என்பது விவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று.
1907ல் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் ஹெர்பட் கிளாட்ஸ்டன் அவர்கள் பிரிட்டனின் அவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் அவையில், இந்த மன்னிப்பு வழங்குதல், கருணை காட்டுதல் சம்பந்தமான விதிகளின் பயன்பாடு பற்றி விளக்குகையில், குறிப்பிட்டார். அது சட்டப் புத்தகங்களிலும் வெளியாகியுள்ளது.
Earlier in 1907, Herbert Gladstone, Home Secretary, in a speech in the House of Commons, emphasised that numerous considerations are relevant and that the exercise of the prerogative does not depend in principles of strict law and justice, still less of sentiment. “It is a question of policy and judgment in each case, and in my opinion, a capital execution which in the circumstances, creates horror and compassion for the culprit rather than a sense of indignation at his crime is a great evil."
1907ம் ஆண்டிலே ஹெர்பர்ட் கிளாட்சன் பொது மக்கள் அவையில் (House of Commons) பேசும்போது, இதில் பல்வேறுபட்ட விஷயங்கள் பரிசீலனை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது நீதி மற்றும் சட்டக் கொள்கைகளையே சார்ந்திருப்பது அல்ல என்பதையும், அதைவிட மன உணர்வுகளை சார்ந்திருப்பது மிகவும் குறைவானதே என்பதையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வழக்கிலும் அடங்கியிருப்பது கொள்கை மற்றும் மதிப்பீடு பற்றிய ஒரு கேள்வியேயாகும். மரண தண்டனை என்பது அதன் சூழ்நிலைகளில் பெரும் பீதியைக் கிளப்புவதே என்பதும், அவரது குற்றம் மிகப் பெரும் கொடுமையானது என்று குற்றம் சாட்டுவதை விட, கருணை காட்டுவதே சிறந்தது என்பதும் எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்ல, நமது இந்திய சட்டக் கமிஷன் அறிக்கைகளில்கூட இந்தக் கருணை காட்டுதலில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது (1967) Vol I, பக்கங்கள் 317-18. கொலைக் குற்றம் புரிந்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள்.
(1) ஏற்கெனவே திட்டமிட்டு பேசினர். Pre-meditation
(2) அவர்களது வயது
(3) அவர்களது மனது, உடல் நிலை
(4) அவர்களது பழைய வரலாறு பழைய குற்றவாளியா என்பன
(5) வெளியே இருந்துவந்த நிர்பந்தச் சூழ்நிலை.
இத்தகைய அம்சங்களையெல்லாம்கூட ஆய்வுக்கு எடுத்து பரிசீலிக்கப்பட்டுத்தான் இறுதி முடிவு (நிராகரிப்பது போன்ற) வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மேலவை கருணை அப்பீலை முடிவு செய்யும் முன்பு, உள்துறை அமைச்சகம், இந்த வழக்கில் சரியாக, முறையாக விசாரிக்கப்படாமல் உள்ளது என்ற ஒரு துளி சந்தேகம் ஏற்பட்டாலும், ஜூரிகள் (அங்கு ஜூரிகள் முறை உண்டு) குற்றவாளி என்று தீர்ப்பளித்துத் தூக்குத் தண்டனையை பரிந்துரை செய்து ஏற்ற நிலையிலும்கூட, மறுபரிசீலனை- மறுவிசாரணை செய்தாக வேண்டும் என்பதே சட்டப்பூர்வ நிலையாகும்.
இங்கிலாந்து நீதிமன்றத்தில் இப்படி தவறு நடந்துள்ளதை திருத்தும், மறுவிசாரணை வழக்கேகூட நடந்துள்ளது.
சட்டம்- விதிகளைவிட மனிதநேயம் முக்கியம். சிறைத் தண்டனைகளின் தத்துவமே வெறும் தண்டிப்பு (Mere Punishment) என்பது மாறி, இப்போது Reformation, குற்றம் செய்திருந்தாலும்கூட அவர்களைத் திருந்தி நல்வாழ்வு வாழச் செய்வதுதான் என்கிறபோது, இந்தக் கருணைப் பிரச்சனையில் அந்த அடிப்படையும் முக்கியம் அல்லவா?.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவருக்கும் காட்டுவது மனிதநேய அடிப்படையில் தேவையல்லவா?.
நமது அரசியல் சட்டப்படி பால், அடிப்படையில் வித்தியாசம் காட்டப்படுவதுகூட விரும்பத்தக்கதல்லவே. எனவே மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தங்களது மனிதாபிமானத்தினைக் காட்ட இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்- கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications