கைது நடவடிக்கையால் திமுகவின் தேர்தல் பணிகளை முடக்க முடியாது: ஸ்டாலின்
திருச்சி: திமுகவினரை தொடர்ந்து சிறையில் அடைப்பதால் திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கிவிட முடியாது என்று அக் கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக பிரமுகர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை எஸ்ஸார் கோபி, திருச்சி குடமுருட்டி சேகர், ஷெரீப் ஆகியோரை சந்தித்த பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்திய பின்னரும் உங்கள் கட்சியின் முன்னணி பிரமுகர்களை நிலம் அபகரிப்பு வழக்கில் கைது செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்கிறதே?
பதில்: தமிழகத்தில் தொடர்ந்து திமுக முன்னணி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். எங்கள் தலைவர் கலைஞர் கூறியது போல் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருகிறது. 2006 முதல் 2011 வரை காலக்குறியீடாக கொண்டு நிலம் அபகரிப்புக்கு என ஒரு பிரிவை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலமாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி பிரமுகர்கள், செயல்வீரர்கள் பலரை பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கேள்வி: விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் திமுகவின் தேர்தல் பணியை முடக்குவதற்காகவே திமுக முன்னணி பிரமுகர்களை அரசு கைது செய்து வருவதாக நினைக்கிறீர்களா?
பதில்: திமுகவின் தேர்தல் பணியை முடக்க முடியாது. ஒரு நேரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலோ ஒரு அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாலோ ஒரு வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டாலோ திமுகவை வீழ்த்தி விட முடியாது. ஆயிரம் வீரபாண்டிகள், நேருக்கள், அனிதா ராதாகிருஷ்ணன்கள் இந்த இயக்கத்தைக் காக்க தயாராக இருக்கிறார்கள்.
கேள்வி: திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு நிலம் அபகரிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதே?
பதில்: இது வடிகட்டிய பொய் வழக்கு. இந்த வழக்கில் யார் புகார் தாரரோ அவரே கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். தலைவர் கலைஞர் அவருக்கு கணையாழி கொடுத்து சால்வை அணிவித்து சிறப்பு செய்திருக்கிறார். அது மட்டுமல்ல அவரது இல்ல திருமணம் கூட கலைஞர் அறிவாலயத்தில் தான் நடந்து இருக்கிறது. வேண்டும் என்றே அவரை மிரட்டி புகார் வாங்கப்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்
இந்த வழக்கில், வியாழக்கிழமை திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என். நேரு மற்றும் திமுகவினரை ஆதாரமில்லாமல் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, "வாரண்ட்' இல்லாத காரணத்தால் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவது நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு அவசர அவசரமாக வாரண்ட் தயாரித்துக் கொடுத்து சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அதிமுகவினர் மீது உண்மையான புகார்கள் அளிக்கப்பட்டபோதும், அதிமுகவினரே அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குறிப்பாக, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ சோமசுந்தரம் ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுவரை அதிமுக அரசின் இந்த வழக்குகளை பொய் வழக்குகள் என்றுதான் கூறி வந்தேன். இப்போது நேரு மீது போடப்பட்டுள்ள வழக்கு வடிகட்டிய பொய் வழக்கு என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications