நெல்லையில் பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை
நெல்லை: நெல்லை அருகே பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவான மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள மேலகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை(35); பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, இவரை நெல்லை டவுண் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திருமலை, மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்லணை பள்ளி அருகே உள்ள சாலையி்ல் நின்ற மர்மகும்பல் ஒன்று அவரை வழிமறித்தது.
பின்னர், திருமலையை உடல் முழுக்க சரமாரியாக வெட்டியது. திருமலையின் தலையை துண்டாக வெட்டியதில், தலை தனியாக அறுந்து விழுந்தது. திருமலை இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்த தலைமறைவானது.
தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் ஜெயபாலன், உதவி கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 2009ம் ஆண்டு மேலகுன்னத்தூரில் விவசாயிகள் சங்க தேர்தலில் கேசியர் பால்சாமியை திருமலையும், அவரது ஆதரவாளர்கள் 11 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக அவரை எதிர்தரப்பினர் வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
பிரபல ரவுடி சாலையில் ஒரு கும்பலால் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications