மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும்- 'நக்கீரன்' கோபால்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல் என்கிற அங்கையற்கன்னி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களை பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர்.
அதில் பங்கேற்ற நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசுகையில்,
பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இது பெரிய விஷயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது. .மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது. நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம்.
அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான்.
மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாராளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது.
இதே போல், இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவினை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபடவேண்டும்.
கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.
செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.
தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.
மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன் என்றார் நக்கீரன் கோபால்.












Click it and Unblock the Notifications