பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாயுடு கூறுகையில், ஆந்திராவில் நான் முதல்வராக இருந்த போது தான் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்தேன். தற்போது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவித்துள்ளேன். என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.
அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன். இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். இப்போதைய சந்தை மதிப்பு அல்ல.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன. என் மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39.56 கோடிக்கு சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12.38 கோடி கடன் இருப்பதால் உண்மையான சொத்து மதிப்பு ரூ.27 கோடி தான். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும் வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக நிறுவனத்துக்காக அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம்.
எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6.8 கோடி சொத்துக்களும், ரூ.9 கோடிக்கு கடனும் உள்ளது.
இது போல, எனது மருமகள் பிராமணி பெயரில் ரூ.3.2 கோடி சொத்து உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.
நிர்வாணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் எங்கள் குடும்பத்துக்கு ரூ.15.75 கோடி மதிப்பில் பங்குகள் உள்ளன. ஆனால், ரூ.15.37 கோடி கடனும் உள்ளது.
ஹெரிடேஜ் புட்ஸ் பொது நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது, அதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.214 கோடி. எங்கள் குடும்பத்திடம் அந்த நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடிக்கு கடன் இருக்கிறது என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications