திருத்தணியில் முருகன் கோவில் இருப்பது தெரியாதா?- தேமுதிக எம்.எல்.ஏவுக்கு ஜெ. கொட்டு
சென்னை: திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது. மேட்டூரில்தான் மேட்டூர் அணை இருக்கிறது என்று கூறி தேமுதிக எம்.எல்.ஏக்கள் பால பாடம் நடத்துகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
நேற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் இரண்டு தேமுதிக உறுப்பினர்கள் சிக்கிக் கொண்டனர். மேட்டூர் தொகுதி உறுப்பினர் பேசும்போது மேட்டூரில் அணை உள்ளது என்று கூறிப் பேசி தனதுதொகுதி தேவைகளை முன்வைத்தார்.
அதேபோல திருத்தணி தொகுதி உறுப்பினர் அருண் சுப்பிரமணியம் பேசும்போது,
திருத்தணியில் புகழ் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளிக்க எழுந்த ஜெயலலிதா பேசுகையில், தே.மு.தி.க. உறுப்பினர்கள் பேரவைக்கு புதியவர்கள். அதனாலேயே அவர்கள் நமக்கு பாலபாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேட்டூர் தொகுதி உறுப்பினர் பேசும்போது மேட்டூரில் தான் மேட்டூர் அணை இருப்பதாக தெரிவித்தார். அது நமக்கு தெரியாதா? அதுபோல அருண் சுப்பிரமணியன், திருத்தணியில் முருகன் கோயில் இருப்பதாகவும், அது அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு என்கிறார். அவர் சொல்லாவிட்டால் நமக்கு தெரியாதா என்றார். இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications