நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீன் மனு தள்ளுபடி

கடந்த திமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. விழுப்புரத்தில் அவரது வீடு உள்ளது. கடந்த ஆக்ஸட் மாதம் 31-ம் தேதி காலை பொன்முடி வீட்டுக்கு வந்த போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
முதலில் கைது எதற்கு என்று தெரியாமல் குழம்பிய திமுகவினருக்கு பின்னர் தான் நில அபகரிப்பு வழக்கு என்று தெரிய வந்தது. விழுப்புரத்தில் அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான தந்தை பெரியார் நகர் என்ற இடம் உள்ளது. அங்குள்ள நிலத்தின் ஒரு பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு பொன்முடி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த சங்கத்தின் அப்போதைய தலைவர் நாராயணசாமி ஒரு புகாரை போலீஸில் கொடுத்தார். அதில் சங்கத்திற்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட இடங்களை பொன்முடி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின்பேரில் தான் பொன்முடி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்முடி ஜாமீன் கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications