செக்கிங் இன்ஸ்பெக்டர் இல்லாததால் நஷ்டத்தில் ஓடும் செங்கோட்டை-மதுரை பாசஞ்சர்
செங்கோட்டை: பயணிகள் ரயில்களில் டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டர் இல்லாததால் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. காலை 7 மணி, மதியம் 12 மணி, மாலை 3.50 மணிக்கு பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறது.
காலை 7.15 மணி, 11.45 மணி, மாலை 5.20 மணிக்கு மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. இந்த ரயில்கள் மூலம் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் குற்றாலத்திற்கு சீசன் காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த ரயில்கள் மூலம் தான் வந்து செல்கின்றனர்.
இவ்விரு ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் இந்த ரயில்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் இருப்பதில்லை. இதனால் விஷமிகள் சிலர் ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு செய்கின்றனர். மேலும் டிக்கெட் இல்லாமல் சிலர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதனால் ரயில்வே துறைக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.
இது போன்ற செயல்பாடுகளால் கடந்த 2006-07ம் நிதியாண்டில் மட்டும் அகில இந்திய அளவில் ரயில்வே துறைக்கு ரூ. 7 ஆயிரத்து 495 கோடியும், 2008-09ம் நிதியாண்டில் ரூ. 15 ஆயிரத்து 268 கோடியும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற இழப்பீடு அதிகரிக்கத் தான் செய்கிறது. எனவே, ரயில்வே துறை இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications