திருச்சி இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்துப் பரிசீலிப்போம்- கருணாநிதி
சென்னை: திருச்சி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து பரிசீலிப்போம். உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்தும் பரிசீலிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. இதனால் ஒரு கட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது.
இந்த நிலையில் தற்போது திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பாணியில் திமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்குமா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கருணாநிதி,
சட்டசபை இடைத்தேர்தலை அதிமுகவைப் போல் புறக்கணிக்கலாமா அல்லது வேறு மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம் என்றார் கருணாநிதி.
திருச்சி மேற்குத் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர் கே.என்.நேரு. தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருக்கிறார். அவரைத்தான் மீண்டும் திமுக நிறுத்தும் என்று தெரிகிறது. ஆனால் அவரை ஏற்கனவே கைது செய்து விட்டதால் திருச்சி வட்டாரத் திமுகவே கலகலத்துப் போயுள்ளது. இந்த நிலையில் தேர்தலைப் புறக்கணித்து எதிர்ப்பைக் காட்டலாமா என்ற கோணத்தில் திமுக தலைமை சிந்தித்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications