பத்மநாப சுவாமி கோவில் பி அறையைத் திறக்க நிபுணர் குழு பரிந்துரை: நாளை தீர்ப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் திறக்காமல் இருக்கும் "பி" அறையை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை பரிசோதிக்க வேண்டும் என்று நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ள பாதுகாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் உச்ச நீதிமன்றத்தால் நியமகிக்கப்பட்ட நிபுணர் குழு 5 அறைகளைத் திறந்தது. அந்த அறைகளில் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் கிடைத்தன.
இதையடுத்து கிடைத்துள்ள பொக்கிஷங்களை துள்ளியமாக மதிப்பிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக தேசிய அருங்காட்சியக இயக்குனர் சி. வி. ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவையும், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட பார்வையாளர் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த குழுக்கள் ரகசிய அறையில் கிடைத்த பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பி என்ற ரகசிய அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதைத் திறந்தால் உலகிற்கு கேடு வரும் என்றும், அறையின் கதவைத் திறப்பவர் குடும்பம் அழியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்களின் பாதுகாப்பு குறித்த இடைக்கால அறிக்கையை நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பி என்ற ரகசிய அறையைத் திறந்து பரிசோதிக்க வேண்டும். அந்த அறையைத் திறந்து பரிசோதித்தால்தான் அதற்குள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது தெரியும். அறையைத் திறந்து, சுவர்களின் தன்மை பற்றி பரிசோதித்தால்தான் அதன் பாதுகாப்பு பற்றி முடிவு செய்ய இயலும்.
அறைக்குள் உள்ள பொருட்களின் அளவு, எடை மற்றும் தரம் பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே அவற்றை பராமரிக்கவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இயலும். இந்த 3 முக்கிய காரணங்களால் பி என்ற அறையைத் திறந்து பரிசோதிக்க வேண்டும்.
தற்போதைய பொற்குவியல் மதிப்பீட்டு பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும். அது குறித்த அறிக்கை செப்டம்பர் மாதத்திலேயே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த மதிப்பீட்டு பணிகள் முடிந்த பிறகு, பி என்ற ரகசிய அறையை திறக்கலாம். கோவிலில் நடத்தப்பட்ட தேவபிரசன்னத்தின் விதி எப்படி இருந்தாலும், தற்போது நடைபெற்றுவரும் பொற்குவியல் மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் மதிப்பீட்டு பணிகள் தொடரும். அவ்வப்போது உள்ள நிலவரங்கள் பற்றி உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்.
கோவில் ரகசிய அறை பொற்குவியலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி அறையைத் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் நாளை(16-ம் தேதி) தீர்ப்பளிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications