சென்னையில் உதயசூரியன் உதிக்கப்போவது நிச்சயம்: மு. க. ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 9. 30 மணி அளவில் கத்திவாக்கத்தில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார். திறந்த ஜீப்பில் வந்த அவர் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மா. சுப்பிரமணியன், 1-வது வட்ட வேட்பாளர் சரிதா சிவக்குமார், 2-வது வட்ட வேட்பாளர் இ.வீ. சரவணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
எனது முதல் பிரச்சாரப் பயணம் இவ்வளவு எழுச்சியோடு இருப்பதைப் பார்க்கையில் சென்னை மாநகராட்சியில் உதயசூரியன் உதிக்கப் போவது நிச்சயம் என்று தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும்.
மா. சுப்பிரமணியத்தை கருணாநிதி 2-வது முறையாக மேயர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே அவர் மனதில் இவருக்கு ஒரு இடம் உள்ளது என்பது தெளிவாகும். எனக்கும், சுப்பிரமணியனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் நான் 2 முறை சென்னை மேயராக இருந்துள்ளேன். அவரும் 2 முறை மேயராக நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் செய்த சாதனைகளுக்காக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு வாக்களியுங்கள். மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டுமானால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர்பாபு, டி.சி. விஜயன், இரா. மணிவாணன், நகர செயலாளர்கள் பாண்டியன், தி.மு. தனியரசு, முத்துசாமி நகராட்சி தலைவர் திருசங்கு, விசுவநாதன், குறிஞ்சி கணேசன் உள்பட பலர் சென்றனர்.












Click it and Unblock the Notifications