நேபாள விமான விபத்தில் பலியான தமிழர்கள்- உருக்கமான தகவல்கள்
திருச்சி: நேபாள விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 கட்டுமானத் தொழிலதிபர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா திருச்சி கிளை நிர்வாகிகள் 12 பேர் கடந்த 23-ம் தேதி டெல்லியில் நடந்த பில்டர்ஸ் சங்கத்தின் அகில இந்திய பொது மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றனர். அதில் 4 பேர் கூட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பினர். மீதமுள்ள 8 பேர் எவரெஸ்ட் சிகரத்தைப் பார்ப்பதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு சென்றனர்.
அங்கிருந்து சிறிய ரக விமானத்தில் இமய மலையின் அழகைப் பார்க்க கிளம்பினர். அப்போது தான் அவர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 19 பேரும் பலியாகினர்.
விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் விவரம் வருமாறு,
1) மணிமாறன் (42). பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா திருச்சி கிளை தலைவர். கட்டிட மதிப்பீட்டாளர். தில்லைநகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தார்.
2) தியாகராஜன் (48). ஜோதி பைல் பவுண்டேஷன் அடுக்குமாடி குடியிருப்பு அதிபர். பில்டர்ஸ் அசோசியேஷன் இணை செயலாளர். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார்.
3) ஏ.கே.கிருஷ்ணன் (73). பாலக்கரையில் ஜவுளி கடை நடத்தி வந்தார். தென்னூர் அண்ணாநகரில் வசித்து வந்தார்.
4) தனசேகரன் (55). தில்லைநகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்த இவர் மெர்க்குரி பில்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
5) கனகசபேசன் (70). கட்டிட மதிப்பீட்டாளர். தில்லைநகர் 10-வது கிராஸில் வசித்து வந்தார்.
6) மீனாட்சி சுந்தரம் (58). மீனா பிராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் அதிபர். தில்லைநகரில் வசித்து வந்தார்.
7) மருதாச்சலம் (68). தில்லைநகர் 3-வது குறுக்குத் தெருவில் வசித்து வந்த இவர் ரோகிணி பில்டர்ஸ் அதிபர்.
8) காட்டூர் மகாலிங்கம் (60). கட்டிட காண்டிராக்டர். மதிமுகவில் முன்னணி நிர்வாகியாக இருந்தவர்.
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் பலியானார்கள் என்ற செய்தி திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு பலியானவர்களில் பெரும்பாலானோர் வாழ்ந்த தில்லை நகர் சோகமயமானது. டிவியில் காண்பிக்கப்பட்ட விபத்துக் காட்சிகளைப் பார்த்து பலியானவர்களின் குடும்பத்தார் கதறி அழுதனர்.
அவர்களின் குடும்பத்தார் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர். அவருக்கு வள்ளிக்கண்ணு என்ற மனைவியும், ராமநாதன், அண்ணாமலை என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கனகசபேசன் (70) மனைவி சுபலட்சுமி கூறுகையில், என் கணவர் 70 வயதிலும் ஒரு இடத்தில் இருக்காமல் சுறுசுறுப்பாக இருப்பார். அவர் ஒரு நாள் கூட நோய் நொடியில் படுத்தது கிடையாது. தினமும் குளிர்ந்த நீரில் தான் குளிப்பார். இப்படி அநியாயமாக விமான விபத்தில் பலியாகிவிட்டாரே என்று கதறினார்.
விபத்தில் பலியான 8 பேரில் 5 பேர் தில்லைநகரில் உள்ள 3, 5, 7, 10-வது குறுக்குத் தெரிவில் வசித்து வந்தனர்.
நேபாளத்தில் விமான விபத்து என்ற செய்தி வெளியானவுடனே திருச்சியில் இருந்து சென்றவர்களின் குடும்பத்தார் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் உறவினர்களில் ஒருவர் காட்மாண்டு விமான நிலையத்தை தொடர்பு கொண்டபோது தான் திருச்சியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இறந்தது உறுதியானது.
டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் திருச்சி திரும்பிய பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் திருசங்கர், கவுதமன், புகழேந்தி ஆகியோர் கூறியதாவது,
நாங்கள் எல்லாம் தனித்தனியாகத் தான் டெல்லி சென்றோம். அவர்கள் 8 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா செல்வதாகக் கூறியதால் நாங்கள் திருச்சிக்கு வந்துவிட்டோம். சுற்றுலா சென்ற நண்பர்களுக்கு இப்படி ஒரு கதி ஏற்படும் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று கூறி கண்கலங்கினர்.












Click it and Unblock the Notifications