தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மனைவி பாரதி மீது வழக்கு பதிவு
நெல்லை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மனைவி பாரதி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு சொந்தமான இரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 120 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்க ஆலை வளாகத்தில் பல அறைகள் உள்ளது. இங்கு, ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள அறையில் ஊழியர்களுக்கு சமையல் செய்ய வைத்திருந்த 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 45 லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கண்காணிப்பாளர் அனில் சிங்கிடம் போலீசார் விசாரித்தனர். ஆலையில் உள்ள ஊழியர்களுக்கு சமையல் செய்ய ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடையில் இருந்து முறைகேடாக வருவதாக விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து முன்னாள் தி.மு.க. அமைச்சர் சுரேஷ்ராஜன் மனைவி பாரதி, ரேஷன் கடை ஊழியர் ராஜராஜன், அனில்சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதனால் தி.மு.க. அமைச்சர் சுரேஷ்ராஜன் மனைவி பாரதி போலீசாரால் கைது செய்யப்படாலம் என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications