பாஜக தேசிய செயற்குழு கூட்டம்-மோடி புறக்கணிப்பு

இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தமும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்த முக்கியமான கூட்டத்தில் அத்வானியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படும் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. நவராத்திரி விழாவையொட்டி அவர் 9 நாட்களுக்கு விரதம் இருப்பதால் அவர் குஜராத்தை விட்டு வெளியேற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜக வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நவராத்திரி உள்ளிட்டவை தொடர்பாக அவரால் வர முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.
உண்மையில் அத்வானி ரத யாத்திரை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மோடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தன்னை பாஜக பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று கருதும் மோடி, அத்வானி தனக்குப் போட்டியாக அந்தப் பதவிக்கு குறி வைத்தே ரத யாத்திரையை நடத்துவதாகக் கருதுகிறார்.
இதனால் தான் அத்வானி ரத யாத்திரை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 3 நாள் அதிரடி உண்ணாவிரதத்தை அறிவித்து நாட்டின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார் மோடி என்பது நினைவிருக்கலாம். அத்வானியின் யாத்திரை அறிவிப்பை மோடியின் உண்ணாவிரதம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இதனால் அத்வானிக்கே கூட அதிருப்திதான் என்று பாஜக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
இந்த உண்ணாவிரத வெற்றியால் கவரப்பட்ட மோடி, குஜராத் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு வருகிறார்.
அத்வானி பிரதமர் வேட்பாளர் அல்ல-நிதின் கட்காரி:
இந் நிலையில் அத்வானி பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப் படுத்துவதற்காக ரத யாத்திரையை மேற்கொள்ளவில்லை என்றும் ஊழலை ஒழிக்கவும், சிறந்த நிர்வாகத்தை வலியுறுத்தியும்தான் இந்த யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார் என்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஓட்டுக்குப் பணம் கொடுத்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய பாஜக முன்னாள் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அத்வானி மிகவும் அதிருப்தியடைந்துள்ளார். இதுவே, அவர் யாத்திரை மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications