கும்பகோணத்தை நினைக்கும்போதகு இங்கு நெல் அளக்க வந்தது நினைவிக்கு வருகிறது- விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்பகோணம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தோம். இப்போதும் மக்களுடன் தான் கூட்டணி அமைத்துள்ளோம். இப்போது தே.மு.தி.க.வை நம்பி 2 கம்யூனிஸ்ட் கட்சிளும் வந்துள்ளன.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அதைப்பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கவலைப்படவில்லை. எனவே மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாகும்.
மாறி, மாறி இரு கட்சிகளுக்கும் வாக்கு அளித்தது போதும் என்ற முடிவிற்கு மக்கள் வரவேண்டும். அந்த இரு கட்சிகளையும் தவிர்த்து மக்கள் வாக்களித்தால் யார் நல்லவர்கள் என்பது தெரியவரும். உள்ளாட்சியில் மேயர், தலைவர், கவுன்சிலர்கள் போன்ற பதவிகள் உண்டு. உள்ளாட்சி என்பது உங்கள் ஆட்சி. அதாவது மக்கள் ஆட்சியாகும்.
நிதி இல்லை என்று நினைக்க வேண்டாம். நிறைய நிதி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நிதியை அளிக்கின்றன. சொத்துவரி, குடிநீர்வரி, மின்சார கட்டணம் போன்றவற்றால் வருவாய் அதிகம் வருகிறது.
தமிழகத்தில் 2 அரசியல் கட்சிகளுக்கு என்ன வேலை என்றால், மாறி மாறி தவறு செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஊழல் செய்து விட்டு மகிழ்ச்சியாக பதவியில் நீடிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி கண்டு 33 ஆண்டுகள் ஆகின்றன. 5 தடவை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் இரு கட்சிகள் இல்லாமல் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
விஜயகாந்த் மக்களிடம் கெஞ்சுகிறார் என கூறுகிறார்கள். மக்களிடம் கெஞ்சாமல் மரம், மட்டையிடமா கெஞ்ச முடியும்? நேற்று வரை காவல்துறையினர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அளித்தனர். ஆனால் எனக்கு என்றுமே மக்களும், தொண்டர்களும்தான் தேவை.
யார் தவறு செய்தாலும் விடமாட்டேன். யார் லஞ்சம் வாங்கினாலும் விடமாட்டேன். எனது கட்சியினரோ, கூட்டணிக் கட்சியினரோ யாராக இருந்தாலும் லஞ்சம் வாங்க அனுமதிக்கப் போவதில்லை. விட மாட்டேன். நானே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பேன். ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். எனது கட்சிக்கு வாக்களித்தால், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முழு கவனம் செலுத்தப்படும்.
கும்பகோணத்தை நினைக்கும்போது, நான் இந்த ஊருக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு நெல் அளக்க வந்தது நினைவிற்கு வருகிறது. அதே போல் குத்தாலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை என கூறிக்கொண்டே செல்லமுடியும். அப்போது நான் இந்த கும்பகோணத்தை சுற்றி பார்த்துள்ளேன். இப்போது எனது கட்சியின் வேட்பாளர் இங்கு போட்டியிடுவதால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்து உங்களிடம் வாக்குகள் கேட்க வந்துள்ளேன்.
மக்களாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் கைதட்டுகிறீர்கள். அதனால்தான் மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர். அவசரப்படாமல் சிந்திக்கவேண்டும். சிந்தித்து வாக்குகள் அளித்தால் அரசியல்வாதிகளால் ஏமாற்ற முடியாது என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications