ரூ. 200 கோடி மதிப்புள்ள செம்மொழிப் பூங்கா இடத்தை அபகரிக்க அதிமுக அரசு முயற்சி- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தால் அரசுக்குச் சொந்தமான இடம் என்று அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட இடத்தில் செம்மொழிப் பூங்காவை அமைத்த நிலையில் தற்போது அந்த இடத்தை அபகரித்து தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்க அதிமுக அரசு முயற்சிக்கிறது. இதை நல்லோர் அனைவரும் இணைந்து தட்டிக் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள அரசுக்குச் சொந்தமான 13 காணி 4 கிரவுண்ட் 1262 சதுர அடி நிலம் உள்ளது. அந்தநிலம் தோட்டக்கலைச் சங்கம் என்ற ஒரு அமைப்பின் பெயரில் தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகரால் சுயலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது அங்குள்ள கட்டிடத்தை அவருடைய சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும், 1989ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது, வந்த புகார்களின் பேரில் நடவடிக்கை எடுத்தது.

பொது நோக்கத்திற்காக, திமுக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 1989ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு நிலுவையிலே இருந்தது. உயர்நீதிமன்றம் 1998ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிறப்பித்த உத்தரவில், நிலத்தைத் திரும்ப எடுத்துக் கொண்ட திமுக அரசின் ஆணையை ரத்து செய்தது.

2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்தது. 2006 திமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கைத் தொடர முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தோட்டக் கலைச் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கு, 2007ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், உயர்நீதிமன்றம் 2008ல் வழங்கிய தீர்ப்பில்; திமுக அரசு செய்த மேல் முறையீட்டு மனுக்களை அனுமதித்தும்; நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள பிறப்பித்த திமுக அரசின் ஆணையை ரத்து செய்து தனி நீதிபதி 1998ல் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. 2008ல் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்:

அரசாங்கத்தின் முன் அனுமதி பெறாமல் வேளாண் தோட்டக் கலைச் சங்கம் ஓட்டலுக்கு இந்த நிலத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே உள்குத்தகைக்கு விட்டிருந்தது. கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் கவுரவச் செயலாளராக ஆன பிறகு தனது சொந்த சொத்து போல இந்த நிலத்தைக் கையாள்வதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலங்கள் பொதுக் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உள்குத்தகைதாரர் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையின் தொடர்ச்சியாக, தோட்டக் கலை கிருஷ்ணமூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், உச்சநீதிமன்றம் 13-11-2009ல் வழங்கிய இடைக்கால ஆணையில் இந்த நிலம் ஏற்கனவே அரசின் கை வசம் உள்ளதால், தோட்டக் கலையின் மேம்பாட்டிற் காக அதைத் தொடர்ந்து அரசு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி விட்டது. ஓட்டல் இருந்த பகுதியில் மிகச் சிறந்த பூங்கா ஒன்றை உருவாக்கி அதை திறந்து வைத்தேன். அந்தப் பூங்காவை ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் கண்டுகளித்து வருகின்றனர்.

பூங்காவுக்கு எதிர்ப்புறம், தோட்டக்கலைச் சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கு முன்; இடத்தைக் காலி செய்து அரசிடம் ஒப்படைக்கக் கோரி தோட்டக்கலைச் சங்கத்துக்கு 15-12-2010, தி.மு. கழக ஆட்சியின் போது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கெதிராக, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதில் அந்தச் சங்கத்திற்கு நேரடி விசாரணைக்கு வாய்ப்பளித்திடும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கிணங்க 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நேரடி விசாரணைக்கு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை நேரடி விசாரணைக்காக தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆஜராகவில்லை. பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, 15-7-2011 அன்று அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென ஆஜராகி சில ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.

சென்னை மாவட்ட ஆட்சியரும், எங்கிருந்தோ செலுத்தப்பட்ட செல்வாக்கிற்கும், நெருக்கடிகளுக்கும், அரசியல் மேலாதிக்கத்திற்கும் பணிந்து, அரசு வழக்கறிஞரின் கருத்துரையினை ஒப்புக்காகப் பெற்று, தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள 4 காணி 18 கிரவுண்ட் 1683 சதுர அடி நிலம் அந்தச் சங்கத்திற்கே உரியது என்று 22-8-2011 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே உத்தரவிட்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்கம் சரி பார்த்ததில் இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானதென்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் சங்கத்திற்கு சொந்தமானதென முடிவு செய்ய, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சியினர் மீது ஏராளமான பொய் வழக்குகளைப் புனைந்து வரும் வேளையில்;

சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில், 200 கோடி ரூபாய்க்கும் குறைவில்லாத மதிப்புடைய அரசு நிலம்; அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆசிகளோடும், அதிகாரிகளின் துணையோடும் அபகரிக்கப்படும் அநீதியை நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் தட்டிக் கேட்க முன் வர வேண்டாமா? நல்லவர்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டால் நாடு என்னாவது? என்று அறிஞர் அண்ணா, அன்று கேட்டதை; இம்மாநிலத்தில் உள்ள அனைவர்க்கும் இன்று நினைவூட்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+