சிரஞ்சீவியைப் போல கட்சியைக் கலைத்து விட்டு காங்.கில் இணைய வேண்டும் விஜயகாந்த்- ஈவிகேஎஸ்
மதுரை: ஆந்திராவில் தனது கட்சியைக் கலைத்து விட்டு நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸில் இணைந்ததைப் போல இங்குள்ள தலைவர்களும் காங்கிரஸில் இணைந்து விட வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகஎஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிரஞ்சீவியைப் பொறுத்தவரையில் மக்களுக்கு உண்மையாக நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனில் தகுதியான கட்சி காங்கிரஸ்தான் என முடிவு செய்து கட்சியில் இணைந்துள்ளார். அதுபோலவே, தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் முடிவு எடுத்தால் நல்லது. அந்த அரசியல் தலைவர் யார் எனக் கேட்டால், தேர்தல் முடிவுக்குப் பிறகு கூறுவேன்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் மக்களிடம் மதிப்பு, மரியாதை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியால் வெற்றி கடினம் என நினைத்தே, திராவிடக் கட்சிகள் வாக்காளர்களுக்கு வேஷ்டி, சேலை, பணம் விநியோகிக்கின்றனர். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்போல உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்தால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இத்தேர்தல் மூலம் கட்சிக்கு நல்ல எதிர்காலம் அமையும். கூட்டணி இன்றி காங்கிரஸ் எதிர்காலத்திலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களது விருப்பம்.
கடந்த 5 ஆண்டுகளாக திமுகவினரின் முறைகேட்டைத் தட்டிக்கேட்டோம். தவறைத் திருத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறாததற்கு இப்போது நிம்மதி தெரிவிக்கிறோம்.
காங்கிரஸ் அடித்தளம் என்பது சரியாக உள்ளது. அதை பலப்படுத்துவோம். யாரும் எங்களது கட்சிக்கு முட்டுக்கொடுத்து ஆதரவளிக்கத் தேவையில்லை. நாங்கள்தான் திமுகவுக்கு ஆதரவளித்து முட்டுக்கொடுத்தோம். அதன்மூலம் தவறு செய்தோம். எதிர்காலத்தில் அப்படித் தவறு நடைபெறாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுவிக்கக் கூறுவது நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிப்பதாக உள்ளது. ஆகவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூவர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் தவறானது என்றார் இளங்கோவன்.
சிரஞ்சீவியைப் போல என்று இளங்கோவன் கூறியிருப்பது மறைமுகமாக விஜயகாந்த்துக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாக தெரிகிறது. இதன் மூலம் வருகிற லோக்சபா தேர்தலில் விஜயகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயலும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications