ஜெயலலிதா பயந்து நடுங்கி நேருவை விடுதலை செய்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின்
திருச்சி: திருச்சி இடைத் தேர்தலில் திமுக பெறப் போகும் வெற்றியை நினைத்து பயந்து நடுங்கித் தான் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்திருக்கிறார் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நான் எடுத்தவுடனே ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். என்ன அந்த மகிழ்ச்சியான செய்து என்று கேட்டால், இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், நேரு அவர்களை நாங்கள் சிறையிலே வைத்திருக்க முடியாது என்று ஆட்சியாளர்களே, இந்த தேர்தலையொட்டி நாம் பெற இருக்கின்ற மாபெரும் வெற்றியை எதிர்நோக்கி, ஜெயலலிதா அவர்களே பயந்து, நடுங்கி இன்று நேரு அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்திருக்கிறார்கள்.
நேருவை இங்கு விடுதலை செய்தால், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அவர் முகம் காட்டுவார் என்று நினைத்து, அவரை நீதிமன்றத்திலேயே வெளியே விடாமல், அவரை கடலூர் சிறைக்கு அழைத்துச் சென்றுதான் விடுதலை செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.
எப்படியாவது திமுக போட்டியிடுவதை தடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா திட்டம் தீட்டினார். திருச்சி மேற்கு தொகுதில் சிறப்பாக செயல்படகூடிய கழகத்தினர் மீதெல்லாம் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்.
குடமுருட்டி செய்த தவறு என்ன? அவருக்கு அத்தனை கொடுமைகள் நடக்கின்றன. அவர் மீது மீண்டும் மீண்டும் குண்டாஸ் பாய்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் நம்முடைய நேரு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே இடைத்தேர்தல் வருகிற போது, நிச்சயமாக நேரு அவர்கள்தான் நிற்பார். கலைஞருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ? எங்களுக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது.
நேருவைத்தான் கலைஞர் நிறுத்துவார் என்று ஜெயலலிதா, கலைஞரின் உள்ளத்தை தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு நேரு மீது பல்வேறு வழக்குகள் தொடுத்தார். அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெருகிறார்.
வழக்கில் ஆதாரமில்லை என்று நீதிபதி, அவரை ஒவ்வொரு முறையும் ஜாமீனில் விடுகிறார்கள். இந்த நிமிடம் வரை எனக்கு சந்தேகமிருக்கிறது. கடலூர் சிறைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இரவோடு இரவாக வேறு ஒரு வழக்கை போட்டுக்கூட அவரை மீண்டும் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.
ஜெயலலிதா அம்மையார் திருச்சி பிரச்சாரத்தில் தலைவர் கருணாநிதி அவர்களை விமர்சித்து பேசியிருக்கிறார். கலைஞர் மீது அவர் அபாண்டமான குற்றச்சாட்டுகளையெல்லாம் அவர் படித்துக் காட்டியிருக்கிறார். கலைஞர் மீது குற்றம் சொல்லுகின்ற திராணி உண்டா? என்ற கேள்வியைத்தான் நான் கேட்கின்றேன்.
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் நிலை என்ன? வாய்தா வாய்தா வாய்தா வாய்தா என்று வாங்கிக்கொண்டே இருக்கும் வாய்தா ராணியை பார்த்து நான் கேட்கிறேன். உமக்கு என்ன தகுதி இருக்கிறது?
நேருவைப்பற்றி பல கோடி ரூபாய் சேர்த்திருக்கிறார் என்று பேசியிருக்கிறார் ஜெயலலிதா. வாய்கூசாமல் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொருப்பில் இருக்ககூடிய ஒரு முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார் என்று சொன்னால், அதுவே சட்டப்படி தேர்தல் விதிமுறைப்படி தவறு.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதத்தில் எத்தனையோ கொடுமைகள். ஒன்றே ஒன்று வேதனை கொடுமையை சொல்லுகிறேன். பரமக்குடி துப்பாக்கிசூட்டில் அப்பாவிகள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேதனையா செய்தி என்னவென்றால், 65 வயது முதியவர் தனது மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் எடுத்துச் சென்று கொண்டிருந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அடுத்த நாள் அவரது மகனுக்கு திருமணம்.
இந்த கொடுமைகளூக்கு எல்லாம் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்கள் பாத மலர்களை தொட்டு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications