வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம், யாராலும் திமுகவை வீழ்த்த முடியாது- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. அரசியலில் வெற்றி, தோல்வி வரும் போகும். வெற்றி கிடைக்கும் போது வெறியாட்டம் போடக் கூடாது. தோல்வி அடையும் போது துவண்டும் போக கூடாது. அப்படி சோர்ந்து விடாமல் இயக்கத்தை நடத்துகிறவன் தான் வீரன் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து நேற்று புத்தூர் நாலு ரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நேரிலே வந்து வாக்கு கேட்க வேண்டியவர் இன்று சிறைகோட்டையில் பூட்டப்பட்டு இருக்கிறார்.

தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெறும் என்பது இலக்கணம். ஆனால் இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற இடைத்தேர்தலும், உள்ளாட்சி தேர்தலும் ஜனநாயக அடிப் படையை குழிதோண்டி புதைத்து விட்டு நடத்தப்படுகிறது.

திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் யார் யார் போட்டியிடுவார்கள் என்று அவர்களை சிறையில் தள்ளி, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க.வின் முன்னோடிகள், நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்தால் சிறையில் தள்ளினால் தொண்டர் ஓடி விடுவார்கள் என்றும், கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் தேர்தல் பணியாற்ற வரமாட்டார்கள் என எண்ணி காவல்துறையோடு கைகோர்த்து எதை வேண்டுமானாலும் செய்துகொண்டு இருக்கிறார். நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அடிக்க அடிக்க தான் பந்து மேலாக எழும். திராவிட முன்னேற்ற கழகத்தின் வீரர்கள், இளைஞர்கள், இதற்கெல்லாம் பயந்து அஞ்சுபவர்கள் அல்ல என்பதை திருச்சியில் நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் எடுத்துக்காட்டுகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சோதனைகள், எவ்வளவோ வேதனைகளை எல்லாம் தாண்டித்தான் வந்தது. இந்த கழகம் கொள்கையுடன் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கிறது. அண்ணாவின் லட்சியங்கள், கொள்கைகள், குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் இளைஞர்களை கொண்டு தாங்கி நிற்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தை யாராலும், எந்த காலத்திலும், எந்த நிலையிலும் சிதைக்க முடியாது. தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. அரசியலில் வெற்றி, தோல்வி வரும் போகும். வெற்றி கிடைக்கும் போது வெறியாட்டம் போடக் கூடாது. தோல்வி அடையும் போது துவண்டும் போக கூடாது. அப்படி சோர்ந்து விடாமல் இயக்கத்தை நடத்துகிறவன் தான் வீரன்.

அமைச்சர் பதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல, தி.மு.க. தமிழர்களுக்காக தமிழர்களை வாழ வைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தமிழ் இனம், திராவிட இனம், நாடு செழிக்க உலகம் செழிக்க இந்த இயக்கம் பாடுபட்டு கொண்டிருக்கிறது.

ஒரே ஒரு நேரு வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ, ஒரு மேயர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ வாக்கு கேட்பதற்காக மட்டும் நான் இங்கே வரவில்லை. தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் திராவிட லட்சியங்கள் காப்பாற்றப்படவேண்டும். அதனை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மீது படை எடுக்க விடாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பது தான் நமது கொள்கை.

கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வராக வந்த நான் இப்போது வெறும் கருணாநிதியாக வந்து நிற்கிறேன்.

முதல்வராக இருந்த போதும், வெறும் கருணாநிதியாக இருக்கிற இப்போதும் தமிழ் தமிழ் என்பதே எனது அரசியல் பணி ஆகும். 1926ல் தமிழ் வளர்க்கும் பணியை தொடங்கினேன். மொழிப்பற்றும், மொழி பேசுகிற மக்கள் மீதும் நான் வைத்திருக்கிற பற்று, என்னை விட்டு அகலாது. நான் மறைந்து விட்ட பிறகும் அது ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.

அண்ணா அறிவாலயத்தை கருணாநிதி எப்படி கட்டினார்? அவரது யோக்கியதை தெரியாதா? கருணாநிதியை போல் தான் அவரது சீடர் நேருவும் இருப்பார் என்றும் ஜெயலலிதா பேசி இருக்கிறார். அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கான நிலத்தை 1972-ல் எப்படி வாங்கினோம் என்பதை இங்கே விளக்க விரும்புகிறேன்.

யாரோ ஒரு ஜமீன் இளைய மகன் சுப்புரத்தினம் நாயுடுவை மிரட்டி வாங்கியதாகவும், அதற்கான பத்திரத்தில் 10 பேருக்கு பதில் ஒரே நபர் மட்டும் கையெழுத்து பெற்றதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு ஆதாரமாக சர்க்காரியா கமிஷன் பற்றியும் பேசி இருக்கிறார்.

நான் அம்மையாருக்கு அன்போடு அறைகூவல் விடுகிறேன். 1972-ல் அறிவாலயம் மனை ஏறத்தாழ 25 கிரவுண்ட் நிலம் வாங்கி தி.மு.க. அறக்கட்டளை பெயரில் பதிவு செய்தோம். அதில் யார் யார் உறுப்பினர்கள் தெரியுமா? கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், 3-வது பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். கிரைய பத்திரத்தில் ஒரு இடத்தில் கூட யாருடைய கையெழுத்தும் இல்லை என்றும் திருச்சியில் ஜெயலலிதா பேசியதால் நான் சென்னை அறிவாலயத்துடன் தொடர்பு கொண்டு ஆகாய விமானம் மூலம் அதன் நகலை இன்று காலை வரவழைத்தேன்.

10 பேர் தி.மு.க. அறக்கட்டளைக்கு 9 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரத்தை சென்னையில் இருந்து வரவழைத்து இருக்கிறேன் (கூட்டத்தினரை பார்த்து கிரைய பத்திரம் நகலை காட்டினார்) அந்த இடத்தில் தான் அறக்கட்டளை உருவாக்கி நான் தலைவராகவும், எம்.ஜி.ஆர். பொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு விலகிய பின்னர் இப்போது மு.க. ஸ்டாலின் வரை அறக்கட்டளையில் இருக்கிறோம்.

நான் விடுக்கும் ஒரே ஒரு அறைகூவலுக்கு அம்மையார் பதில் அளிப்பாரா? ஜெயலலிதா இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறாரா? ஏற்றுக்கொண்டு எங்கள் தோழர்களை எல்லாம் நீதிமன்றத்திற்கு இழுக்கிற ஜெயலலிதா நீங்கள் நீதிமன்றத்திற்கு வர தயாரா? தயார் இல்லை என்றால் அதற்குரிய தண்டனையை அவரே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள், இங்கே சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்படி நடத்திய பயணத்தில் முழுக்க முழுக்க என் மீது வசைமாரி பொழிந்திருக்கிறார். நேரு என்னென்ன தவறு செய்தார் என்று பட்டியலிட்டுவிட்டு, நேரு மாத்திரம் அல்ல; அவர் தலைவரே அப்படித்தான் என்றூ கூறியிருக்கிறார்.

நான் நாட்டிலே ஏமாற்றப்பட்டவர்களுக்கு அவதாரமாக வந்திருக்கிறேன். அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுப்பேன் என்று இதே திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா பேச்சைகேட்டபோது எனக்கே சிரிப்பாக இருந்தது. கருணாநிதி என்ன யோக்கியமா? என்று கேட்டுவிட்டு, என்னைப்பற்றி ஒன்று சொல்லியிக்கிறார். நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. என்னைப் பார்த்து யோக்கியனா என்றுகேட்டாலும், அது உங்களைப் பார்த்து கேட்டதாகத்தான் அர்த்தம்.

அதிமுக ஆட்சி மெஜாரிட்டி ஆட்சி. திமுக ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என்று கூறிவிட்டு தனது மேதாவிலாசத்தை காட்டியிருக்கிறார். நான் இன்றைக்கும் மறுப்பவன் அல்ல. நாங்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தியவர்கள்தான். மைனாரிட்டி ஆட்சி நடத்திக்கொண்டு, மெஜாரிட்டி மக்களை எல்லாம் எங்கள் பக்கம் இழுக்கின்ற வகையிலே அவர்களுக்கு நன்மைகள் பலவற்றை செய்த அரசு, திராவிட முன்னேற்றக் கழக அரசு.

நாங்கள் மைனாரிட்டிதான்; எண்ணிக்கை குறைவுதான். ஆனால் எங்களுடைய தோழர்களை எங்களது கூட்டணிக் கட்சியினரை யாரையும் நாங்கள் அவமானப்படுத்தவில்லை. யாரையும் நாங்கள் விரட்டி அடிக்கவில்லை. யாரையும் வீட்டு வாசலிலே காவலுக்கு வைக்கவில்லை.

தமிழ்நாட்டுக்கு உரிய பண்பை கடைபிடித்து கட்சி நடத்துகின்றவன் கருணாநிதி. இதை அம்மையார் ஜெயலலிதா மறந்துவிடக்கூடாது என்றார் கருணாநிதி.

தந்தைக்கே மகன் சொல்லுகின்ற...

முன்னதாக கருணாநிதி நீண்ட உரையாற்றிக் கொண்டிருந்தபோது, நேரம் 9.57யைக் கடந்துவிட்டது. அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனே குறுக்கிட்டு, மணி பத்தாகப் போகிறது, தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்படி 10 மணிக்கு பேச்சை முடிக்க வேண்டும் என நினைவூட்டினார்.

இதையடுத்துப் பேசிய கருணாநிதி, ''இதுதான் திமுக. மணி காலம் கடந்துவிட்டது என்பதை எச்சரித்து, காவல்துறை விதித்திருக்கின்ற கட்டுப்பாட்டை மீறக்கூடாது என்று, தந்தைக்கே மகன் சொல்லுகின்ற இந்த நியாய உணர்வுதான் திமுக. இதைப் புரிந்து கொண்டு அதிமுகவினர், ஜெயலலிதா அம்மையாருடைய சீடகோடிகள், எதிர்காலத்திலே அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+