தாய்லாந்து வெள்ளம் குறித்து இந்தியர்களை எச்சரிப்பு விடுகிறது இந்திய தூதரகம்
பாங்காக்: தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள், அங்கு தற்போது நிலவி வரும் கடும் வெள்ளம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுமாறு இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது.
சமீபகாலமாக தொடர் மழையினால் தாய்லாந்து நாட்டில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள எல்லா ஆறுகளும் நிரம்பி அபாய நிலையில் உள்ளன. முக்கியமாக தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து தகவல்கள் அவ்வப்போது விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
பல அணைகள் அபாய நிலையில் இருப்பதால், திடீர் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 54 நெடுஞ்சாலைகள் இதுவரை பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் தாய்லாந்தின் பிரபல சுற்றுலா தளமான சாயீங் மைய் மற்றும் அயூத்யா போன்ற பகுதிகளுக்கு செல்ல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
எனவே, இந்தியாவில் இருந்து தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகள், அங்கு தற்போது நிலவிவரும் சூழ்நிலைகள் குறித்து தகுந்த முறையில் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலா வந்து நாடு திரும்ப உள்ள இந்தியர்களும் ஜாக்கிரத்தையாக செயல்பட வேண்டும்.
வெள்ளத்தால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தில் எந்த பகுதிகளுக்கு செல்லும் முன்னும், தகுந்த வழிநடத்தல்களை பெற்று கொள்ள வேண்டும்.
அபாய நிலையில் உள்ள அணைகளை திறந்துவிட்டால், பாங்காங் நகரின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையமும் வெள்ளத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தாய்லாந்து சுற்றுலா செல்வோர், தங்கள் வழித்தடம், தங்கும் ஹோட்டல்கள், பயண வழிக்காட்டி ஆகியவற்றை குறித்து விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இதுவரை 250 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications