Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் முழுவதும் 12,106 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை- பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 12,106 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் இருக்கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4,877 வாக்குசாவடிகளும் பதற்றமானவைகளாக முடிவு செய்யப்பட்டு அனைத்து வாக்குசாவடிகளிலும் வீடியோ ஒளிப்பதிவு, வெப்கேமரா மூலம் பதிவு செய்வது குறித்து தேவையான ஆணைகள் இடப்பட்டுள்ளன.

சென்னையை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் 12,106 வாக்குசாவடிகள் பதற்றமானவை.

இந்த பகுதிகளில் வாக்குப்பதிவின்போது அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ மூலம் படமெடுக்கவும், வாய்ப்புள்ள இடங்களில் வெப் கேமரா மூலம் நிகழ்வுகளை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் ஏதாவது இடங்கள் பதற்றமானவை என தெரிய வந்தால் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் கருதினாலும் அவற்றையும் பதற்றமானவைகளாக கருதி வீடியோ, வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து இடங்களிலும் வீடியோ, வெப் கேமரா மூலம் கண்காணித்து அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக பதிவு செய்யவும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சி தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

வாக்குச் சீட்டைத் திருப்பித் தரலாம்

வாக்காளர் ஒருவர் வாக்குசீட்டை பெற்றுவிட்டு, வாக்களிக்க விரும்பவில்லை என்றால், அந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி தலைமை அதிகாரியிடம் திரும்ப வழங்கலாம். இந்த வாக்குச்சீட்டை திரும்ப பெறப்பட்டது; ரத்து செய்யப்பட்டது என எழுத வேண்டும்.

தகுதியுடைய வாக்காளர்களை எந்த நிலையிலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரு வாக்காளர், அவருக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு கவனக்குறைவாக கையாண்டு, பாழ்படுத்திவிட்டால் அதை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் திருப்பிக்கொடுக்கவேண்டும்.

வேண்டுமென்றே சேதப்படுத்தப்படவில்லை என அலுவலர் திருப்தி அடைந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு வேறொரு வாக்குச்சீட்டை அளிக்க வேண்டும். திரும்பப் பெற்ற வாக்குச்சீட்டின் பின்புறம் 'சேதமடைந்தது, ரத்து செய்யப்பட்டது' என எழுதி அதற்கான தனி உறையில் வைக்கவேண்டும்.

ரகசியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்புக்குப் பின் ரகசியத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாக்குப்பதிவு நடை முறையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் எச்சரித்த பிறகும், வாக்குப்பதிவு நடைமுறையை வாக்காளர் கடைபிடிக்கவில்லை என்றால், அவரை வாக்காளிப்பதற்கு அனுமதிக்க தேவையில்லை.

மேலும் அந்த வாக்காளருக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை திரும்ப பெற்று, அதன் மீது விதிமுறை மீறல்-ரத்து செய்யப்பட்டது என வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் பதிவு செய்யப்பட வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட இத்தகைய வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் வாக்குப்பெட்டியினுள் போடாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள உறையில் வைக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட வாக்குச்சீட்டு குறித்து படிவம் 20 பகுதி 1ல் தவறாமல் குறிக்க வேண்டும்.

பூத் அருகே ஓட்டு கேட்கக் கூடாது

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் எந்த அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் முகாம்களை அமைக்கக்கூடாது. முகாம்கள் எளிய வகையில் அமைய வேண்டும். அங்கு தின்பண்டங்களை விநியோகிக்கக் கூடாது. கூட்டம் கூடவும் அனுமதிக்கக்கூடாது.

முகாம்கள் எளிய வகையில் அமைவதை உறுதி செய்யும் வகையில் அங்கு சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிரசார பொருட்கள் எவற்றையும் அதிகமாக காட்டி பெரிதுபடுத்தக்கூடாது.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வழங்கும் அடையாள சீட்டுகள் வெற்றுத் வெள்ளைத்தாளில் இருக்க வேண்டும். அதில் சின்னமோ, வேட்பாளரின் பெயரோ அல்லது கட்சியின் பெயரோ எதுவும் இருக்கக்கூடாது.

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் ஆதரவு கோருவது சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்யலாம்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதிச் சீட்டு பெறாமல் எந்த நபரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது.

வாக்குச்சாவடியின் தலைமை தேர்தல் அலுவலரின் சட்டரீதியான உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கும் நபர்கள் காவலர் மூலமாக வெளியேற்றப்படுவார்கள்.

வாக்குச்சாடியில் இருந்து வாக்குச்சீட்டை திருட்டுத்தனமாக எடுத்துச் செல்பவர்கள், அல்லது அதற்கு முயற்சி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அரசு ஊழியர்கள் பாரபட்சமின்றி செயல்படவேண்டும். போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கோ, அரசியல் கட்சிக்கோ ஆதரவாக ஈடுபடுவதாக தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அதை தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.

அமைச்சர்கள் பயணம் செய்தால் அந்த பயணம் தேர்தல் நிமித்த பயணமாகவே கருதப்படும். பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்த்து வேறு எந்த அரசு பணியாளரும் அமைச்சருடன் செல்லக்கூடாது. இத்தகைய பயணங்களில் அரசு வாகனங்களை பயன்படுத்தவும், அரசு சலுகைகளை அனுபவிக்கவும் அனுமதியில்லை.

அரசாங்க விமானம், வண்டிகள் உட்பட அரசு போக்குவரத்தும், அரசு அலுவலர்களும் பணியாளர்களும் ஆளும் கட்சியின் நலனுக்காக பயன்படுத்தக்கூடாது.

மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது. வேட்பாளர் அல்லது அனுமதி பெற்ற தேர்தல் முகவர் என்ற முறையில் தான் நுழையலாம். வாக்காளர் என்ற முறையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

செங்கல், ஜல்லி கூடவே கூடாது

இதற்கிடையே வாக்குச் சாவடி மையங்களுக்கு அருகில் ஜல்லி, செங்கல், இரும்புக் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வைத்திருக்கக் கூடாது என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் கட்டுமானப் பணிகளுக்காக செங்கல், ஜல்லி, கம்பு, இரும்பு தளவாடப் பொருட்களை இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்குப்பதிவின் போது மோதல் ஏற்பட்டால், இவற்றை ஆயுதங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே அந்தந்த பகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று செங்கல், ஜல்லிகளை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+