வலுவான லோக்பால்: காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார்! - ஹஸாரே

Subscribe to Oneindia Tamil

ராலேகான் சித்தி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர உறுதி பூண்டிருப்பதாக கூறி இருந்தார்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே நேற்று காலவரையற்ற மவுன விரதத்தை தொடங்கினார். அதற்கு முன்பு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் எழுதிய கடிதத்தால், வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்ற ஊக்கம், என்னுள் எழுந்துள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், வலுவான லோக்பால் மசோதா கொண்டு வருவதுடன், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், நான் ஏன் காங்கிரசை எதிர்க்கப்போகிறேன்? இன்னும் சொல்லப்போனால், காங்கிரசுடன் இணைந்து செயல்படுவேன்.

அதே சமயத்தில், வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படாவிட்டால், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். எனது குழு, காங்கிரசுக்கு எதிரானது என்பதோ, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டளைப்படிதான் நான் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தேன் என்பதோ தவறு.

நான் ஆர்.எஸ்.எஸ். தலைவரை நேரில் பார்த்தது கிடையாது. பேசியதும் கிடையாது. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் எனக்கு சம்பந்தம் இல்லை. காங்கிரஸ், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கூட்டாக சதி செய்து, எனது குழுவை களங்கப்படுத்தி வருகின்றன.

மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ராம் மாதவை எனக்கு அடையாளம் தெரியாது. எனது உண்ணாவிரத மேடையில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு நான் நன்றி சொல்லவில்லை. என் குழுவைச் சேர்ந்த வேறு யாராவது சொல்லி இருப்பார்கள். அதுபற்றி எனக்கு தெரியாது.

ஜனாதிபதி ஆக ஆசை இல்லை

என்னை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்த பா.ஜனதா திட்டமிடுவதாக கூறுகிறார்கள். எனக்கு ஜனாதிபதி ஆவதற்கான திறமையோ, விருப்பமோ கிடையாது. ஒருவேளை, நான் ஜனாதிபதி ஆனால் கூட, இப்போது சமூகத்துக்கு செய்யும் வேலையைக் கூட செய்ய முடியாமல் போய்விடும்.

காஷ்மீர் பற்றிய பிரசாந்த் பூஷணின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டை கூறுபோடும் எந்த கருத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். பிரசாந்த் பூஷண், எங்கள் குழுவில் நீடிக்கலாமா? என்பது பற்றி எங்கள் குழுவின் உயர்மட்டக் குழு ஆலோசனை செய்யும். அதன்பிறகு, நான் முடிவு எடுப்பேன்.

பாராளுமன்றத்தை விட உயர்ந்தவனா?

அதுபோல், நான் பாராளுமன்றத்தை விட உயர்ந்தவன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதையும் நான் ஏற்கவில்லை. அவர் பேசியது தவறுதான். பாராளுமன்றத்தை விட மக்கள்தான் உயர்ந்தவர்களே தவிர, தனிப்பட்ட நான் அல்ல.

இனிமேல், எல்லா பிரச்சினைகள் பற்றியும் கருத்து சொல்ல வேண்டாம் என்று எனது குழுவினரிடம் சொல்லப்போகிறேன்," என்றார்.

காலவரையற்ற மௌன விரதம்

இதையடுத்து, ராலேகான் சித்தியில், அன்னா ஹசாரே மவுன விரதம் தொடங்கினார். அங்குள்ள பத்மாவதி கோவில் அருகே உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து அவர் மவுன விரதத்தை தொடங்கினார். இந்த விரதத்தின்போது, அவர் ஒரு குடிசையில்தான் தங்கப் போகிறாராம்.

ஒரு வார கால மௌன விரதம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது காலவரையற்ற மௌன விரதம் என்று ஹசாரேவின் உதவியாளர் தத்தா அவாரி அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+