சிபிஐ எம்.எல்.ஏ.வின் அராஜகத்தை தடுக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் கொளத்தூர் மணி மனு
கிருஷ்ணகிரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி எம்.எல்.ஏ. பி.ராமசந்திரனின் செய்து வரும் தேர்தல் முறைகேடுகளை தடு்தது நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்த பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, தளி சட்டமன்ற உறுப்பினர் (சிபிஐ) பி. ராமச்சந்திரன் அவர்களின் சொந்த ஊர் ஆகும். சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும், அவரது சகோதரர் பி. வரதராஜனுக்கும் அஞ்சியே அந்த பகுதி மக்களும், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களும், அரசியல் கட்சிகளும் உள்ளன என்பதே உண்மை நிலவரம் ஆகும்.
எடுத்துக்காட்டாக, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு (திம்ஜேபள்ளி) கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவியின் தம்பி கேசவமூர்த்தி சிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிகிறார்.
இவருக்கு எதிராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கணேசன், திமுக வேட்பாளர் சின்ராஜு, தேமுதிக வேட்பாளர் முனிராஜ், சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ் ஆகிய அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தரப்பினரின் மிரட்டலுக்கு பயந்து தங்களின் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் கேசவமூர்த்தியைப் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வழி விட்டுள்ளனர்.
அது போலவே சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான 6வது வார்டுக்கு, சிபிஐ சார்பில் ஷனஜா கலீல் என்பவர் போட்டியிடுவதால், அவரை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் ஜெயந்தம்மா ஜெயப்பா என்பவரின் வேட்புமனுவைத் மிரட்டி திரும்பப் பெற வைத்துள்ளார் ராமச்சந்திரன்.
ராமச்சந்திரனின் மிரட்டலுக்கு பயந்து, திமுக வேட்பாளர் முனியம்மாவும், சுயேட்சை வேட்பாளர் ஜானகி என்பவரும் தலைமறைவாகிவிட்டதால், அவர்களது வேட்பு மனுவை திரும்பப்பெற வைக்க முடியவில்லை. எனினும் அவர்கள் இருவரும் வாக்கு சேகரிக்க தமது பகுதிக்குள் செல்ல முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.
அது போலவே, சட்டமன்ற உறுப்பினரின் சொந்த ஊராட்சியாகிய நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களின் சகோதரி வனிதா திம்மராயன் சிபிஐ-ன் சார்பில் போட்டியிடுவதால் அந்த ஊராட்சியில் வேறு எந்த அரசியல் கட்சியும் வேட்புமனுவை தாக்கல் செய்ய விடவில்லை. வனிதாவுக்கு எதிராக ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் நாராயணம்மா என்பவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
14.10.2011, அன்று நான் அப்பகுதிக்கு எங்கள் இயக்கத் தோழர்களைச் சந்திக்க சென்ற போது அந்த சுயேச்சை வேட்பாளர் நாராயணம்மா என்னை சந்தித்தார். அப்போது தேர்தல் நாளில் சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் வன்முறையில் ஈடுபடவும், கள்ள வாக்குகளைப் போட்டு, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் நிலமை உள்ளதாகவும், நாகமங்கலம் ஊராட்சி மன்றத்தின் அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பும், வாக்குப்பதிவின் போது வீடியோ எடுக்கவும் வேண்டுமென்று கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்துள்ள விண்ணப்பத்தின் நகலை என்னிடம் அளித்தார்கள்.
நானும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து என் சார்பிலும் ஒரு வேண்டுகோள் கடிதத்தை அளித்துள்ளேன். நான் விசாரித்தறிந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறையினரும் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்துக்கு விருப்பத்திற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று அறிகிறேன். ராமச்சந்திரன் அவர்களின் ஆள் பலத்தை விட அவர்களின் பணபலம் எல்லோரையும் மவுனிக்க செய்துவிடுகிறது என்றே உணர்க்கிறேன்.
நாகமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவராக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரியை எதிர்த்துப் போட்யிடும் நாராயணம்மாவை சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் ரூ. 5 லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறி திரும்பப் பெறவேண்டும் என்று கூறியது கூட எனக்கு வியப்பாக இல்லை...., நாராயனம்மா அவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஒரு காவல் துறை ஆய்வாளரே தொலைபேசியில் தொடர்புகொண்டு “ஏன் வீண்வம்பு....? உங்களின் “மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு “தேவையானதை நான் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினார்கள் என்பதை அறிந்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி மன்றத்திற்காக 19-10-2011 அன்று வாக்களிப்பு நடைபெறும் போது தேவையற்ற வன்முறைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களின் ஆட்கள் கள்ளவாக்குகள் போடாமல் தடுப்பதற்கும், நாகமங்கலம் ஊராட்சியின் வாக்குச்சாவடிகளான 1. நாகமங்கலம், 2. நீலகிரி, 3. வரகானப்பள்ளி, 4. பெரிய நாகதொனை, 5. தாசனபுரம் ஆகிய 5 வாக்குச்சாவடிகளுக்கும் வெளி மாநில காவல்துறை பாதுகாப்பும், வீடியோ படப்பிடிப்புக்கும் ஏற்பாடு செய்து நேர்மையான அமைதியான, பாதுகாப்பான தேர்தல் நடந்திட உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கண்காணிப்பு ஒளிப்பதிவு அந்தப் பகுதியின் உள்ள பல வாக்குச்சாவடிகளில் முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications