தேமுதிக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு: சென்னையில் திமுக-அதிமுக தொண்டர்கள் மோதல்
சென்னை: சென்னையில் பல இடங்களில் அதிமுக-திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தேமுதிக வேட்பாளர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை 10.30 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் அதிமுக பிரமுகரான குட்டியம்மாள் என்ற சரஸ்வதியை திமுகவினர் அரிவாளால் வெட்டினர். வண்ணாரப்பேட்டை அப்பாசாமி தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையிலான ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்துவிட்டது என்று திமுக மற்றும் தேமுதிகவினர் புகார் தெரிவி்த்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர்.
கொசப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 10 கார்களில் ஆட்களுடன் வந்து கள்ள ஓட்டு போடுவதாகக் கூறி திமுக மற்றும் தேமுதிகவினர் அங்கு சாலை மறியலலில் ஈடுபட்டனர். இது குறி்த்து அறிந்த போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டிவிட்டு அதிமுகவினரையும் அப்புறப்படுத்தினர்.
எழும்பூர் அம்பேத்கார் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டுப்போடுவதாகக் கூறி திமுக, தேமுதிக மற்றும் பாமகவினர் போராட்டம் நடத்தினர். அங்கு போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளு, முள்ளு ஆகிவிட்டது.
தேனாம்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி சுப்புலட்சுமியை யாரோ ஒருவர் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று புகார் கூறப்பட்டது. சுப்புலட்சுமி தேர்தல் பணி செய்ய மறுத்து தேம்பித் தேம்பி அழுதுள்ளார். பின்னர் போலீசார் வந்து அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
கீழ்பாக்கத்தில் உள்ள அவர்லேடி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் திமுக, தேமுதிக ஏஜெண்டுகள் டியூப்லைட்டுகளால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. புரசைவாக்கம் சுந்தரம்பிள்ளை தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்ததால் அங்கும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வேளச்சேரி விஜயநகரில் திமுக, அதிமுக கவுன்சிலர் வேட்பாளர்களும், கட்சித் தொண்டர்களும் மோதினர். இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டனில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பாமக வேட்பாளரின் ஏஜெண்டான வழக்கறிஞர் ராமலிங்கம் தாக்கப்பட்டார். கிழிந்த சட்டையுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த அவர் தன்னை ஒரு உதவி கமிஷனரும், சப்-இன்ஸ்பெக்டரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறினார்.
திமுக எம்பி டி.கே. எஸ். இளங்கோவன் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்படவில்லை என்றும், திமுக ஏஜெண்டுகளை அதிமுகவினர் மிரட்டுகின்றனர் என்றும் புகார் கொடுத்துவிட்டு சென்றார்.
நேற்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த 2 வாக்குசாவடிகளுக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்தவர்களை விரட்டியடித்து வாக்குப்பதிவு எந்திரங்களை கீழே தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
செம்பியத்தில் ராமமூர்த்தி என்ற திமுக தொண்டரும், தேனாம்பேட்டையில் திமுக பெண் வேட்பாளர் தீபாதேவியின் கணவர் மதிவாணனும் தாக்கப்பட்டார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள 35-வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வேல்முருகன் அரிவாளால் வெட்டப்பட்டார். அவரது தம்பிகள் பிரபு, சரவணன் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications