Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''அதைப்பற்றி பிரதமரும் பேசவில்லை, நானும் பேசவில்லை''... கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் உள்ள கனிமொழியின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரித்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

டெல்லியில் திமுக எம்பியும் தனது மகளுமான கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் சந்தித்து கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இந் நிலையில் 4 நாட்கள் டெல்லியிலிருந்த அவர் சென்னை திரும்பிய பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: கனிமொழி எப்படி இருக்கிறார்?

பதில்: உடல் இளைத்திருந்தாலும் உறுதியாக இருக்கிறார்.

கேள்வி: கனிமொழி ஜாமீன் தள்ளிப் போவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்: பின்னணி இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. அது அரசியல் பின்னணியா? அல்லவா என்பது எனக்குத் தெரியாது.

கேள்வி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கனிமொழி ஜாமீன் பற்றி பேசினீர்களா?

பதில்: கனிமொழி சிறையில் எப்படி இருக்கிறார்? செளக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டார். அதைத் தவிர வேறு எந்த பேச்சுவார்த்தையும் அதைப் பற்றி பேசவில்லை.

கேள்வி: சோனியா காந்தியிடம் வேறு என்ன பேசினீர்கள்?

பதில்: அவருக்கு உடல் நலமில்லை என்ற செய்தியறிந்த போதே அவருக்கு கடிதம் எழுதினேன். பிறகு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட போதும் விரைவில் குணமடைய தந்தி அனுப்பியிருந்தேன். சென்ற முறை டெல்லி சென்றபோது அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை கேள்வியுற்று சென்று பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது உடல் நலம் பெற்றிருக்கிறார் என்பதையறிந்து நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தேன். வாழ்த்துக்களை சொன்னதோடு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: கனிமொழிக்கு ஜாமீன் வழங்காதது குறித்து தந்தை என்ற முறையில் எந்தவிதமான கவலையை அளிக்கிறது?

பதில்: தந்தை என்பதை விட்டுவிடுங்கள். ஒரு மனிதன் என்ற முறையிலே கூட இதில் உள்ள நியாயம், அநியாயங்களை நான் பகுத்தறிந்து அதற்கான உணர்வுகளை பெற வேண்டியவனாக இருக்கிறேன். இந்த முறை ஜாமீன் மறுக்கப்பட்டதாக சொல்ல முடியாது. ஜாமீன் கொடுக்கலாம் என்று நீதிமன்றத்திலே சிபிஐ வெளிப்படையாக சொல்லி இருக்கிறது. தீபாவளி விடுமுறையினால் அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை என்றும் 3ம் தேதி அன்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.

கேள்வி: நவம்பர் 3ம் தேதி என்ன நடக்கும் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: நல்லவற்றையே நினைப்போம்.

கேள்வி: பிரதமரிடம் கூடங்குளம் பிரச்சனை பற்றி பேசினீர்களா?

பதில்: கூடங்குளம் பிரச்சனையில் அங்கே வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதிபட பாடுபட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினேன். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கினேன்.

இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக் கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். இப்போதுள்ள அரசும் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அதை வழிமொழிந்து கேட்டுக் கொள்கிறோம் என்பதை பிரதமரிடம் விளக்கிச் சொன்னேன்.

கேள்வி: திமுகவுக்காக 2 மத்திய அமைச்சர் பதவிகள் காலியாக இருப்பதாக முன்பு பிரதமர் கூறியிருந்தாரே. அது பற்றி பேசினீர்களா?

பதில்: அதைப் பற்றி அவரும் பேசவில்லை, நானும் கோரிக்கை வைக்கவில்லை.

கேள்வி: அந்த இடத்தை எப்போது நிரப்ப போகிறீர்கள்?

பதில்: நிரப்பும் போது உங்களுக்கு தெரியும்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கிறது?

பதில்: இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுவது என்று ஆலோசித்து அவ்வாறே போட்டியிட்டது. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மற்ற கட்சிகளோடு உடன்பாடு கொள்வதற்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுகிற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஏற்கனவே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை சதவீதக் கணக்கில் பார்த்தால் அதிமுக 39.02, திமுக 26.09, தேமுதிக 10.11, காங்கிரஸ் 5.71 என வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக. விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82,49,991. பதிவான வாக்குகளில் அது 22.30 சதவீதம். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப போட்டியிட்டு 26.09 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

கேள்வி: ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?

பதில்: அதைக் காரணமாக சொல்ல முடியாது. வாக்குகள் அதிகமாக கிடைத்ததால் சதவீதம் அதிகரித்துள்ளது.

கேள்வி: இவை அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகளா?

பதில்: கடந்த 4, 5 மாத காலத்திற்குள் இந்தக் காரணங்களை எல்லாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.

கேள்வி: காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கிறார். திமுகவும் அப்படிப்பட்ட நிலையை எடுக்குமா?

பதில்: இதுபற்றி எல்லாம் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களிடம் கலந்து கொண்டு தான் நான் எதுவும் சொல்ல முடியும். உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டை பொறுத்தவரை செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடு. ஆனால் அத்தகைய ஏற்பாடு மாற்றப்பட வேண்டும் என்று என்னிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசவும் இல்லை. அதற்கான அறிவிப்பை செய்யவும் இல்லை என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+