பரிதி இளம்வழுதியின் ராஜினாமா ஏற்பு: திமுக துணை பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி நியமனம்
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய பரிதி இளம்வழுதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி நியமிக்கப்படுவதாகம் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
திமுகவின் மிக முக்கிய இளம் தலைவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த 8ம் தேதி தனது துணைப் பொதுச் செயலர் பதவியை ராஜினாமா செய்தார்.
பரிதியின் ஏரியாவான சென்னை எழும்பூரைச் சேர்ந்த 3 திமுகவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் தாற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பரிதியின் கோரிக்கைப்படி அந்த நடவடிக்கையை திமுக தலைமை எடுத்தது.
ஆனால், அந்த மூவரும் திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதையடுத்து அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது குறித்து தன்னிடம் பேசாமலேயே தலைமை எடுத்த முடிவு பரிதிக்கு அதிர்ச்சி தந்தது.
இதையடுத்து தனது ராஜினாமாவை அறிவித்தார் பரிதி. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், "திமுகவில் தாங்கள் கடைபிடித்து வரும் உட்கட்சி ஜனநாயகத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். வாழ்க உட்கட்சி ஜனநாயகம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவர் கட்சியை விட்டும் விலகுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அதை பரிதி மறுத்தார். இறுதி வரை திமுகவிலிருந்தபடியே நியாயத்துக்காகப் போராடுவேனே தவிர, அன்றும், இன்றும், என்றும் என் கனவில்கூட மாற்று சிந்தனை வராது என்று அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் பரிதியை சீண்டு வகையில் திமுக தலைமை இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக சட்டதிட்ட விதி-22, பிரிவு 1-ன்படி ஏற்கனவே பணியாற்றி வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி தனது பொறுப்பில் இருந்து விலகிவிட்ட காரணத்தால், அவரது விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு பதிலாக வி.பி.துரைசாமி திமுக தலைமைக் கழகத்தால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
பரிதியை திமுக தலைமை அழைத்து சமாதானப்படுத்தும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக திமுக அறிவித்துள்ளது பரிதியின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் பரிதி இளம்வழுதியின், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் கட்சியை விட்டு விலகலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியால், பயமறியா சிங்கக்குட்டி என்று செல்லமாக அழைக்கப்பட்ட பரிதி இளம்வழுதி, கடந்த காலத்தில் தனி ஒருவராக நின்று சட்டசபையில் திமுக சார்பில் அதிமுக அரசுடன் மோதியவர் ஆவார்.
மிகச் சிறந்த பேச்சாளரான இவர் பேச ஆரம்பித்தாலே ஆளும் அதிமுக தரப்பு டென்சனாகிவிடும். பொதுப் பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே மிக லாவகமாக திமுகவின் அதிமுக எதிர்ப்புக் கருத்துக்களை திடீரென புகுத்தி எதிர் தரப்பை அதிர வைப்பார்.
இவரை பல தேர்தல்களில் தோற்கடிக்க அதிமுக எவ்வளவோ முயன்று தோற்றுள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படி மயிரிழையில் தோற்றுப் போனதற்கு அதிமுக-தேமுதிக கூட்டணி பலத்தை விட திமுகவில் பரிதிக்கு எதிராக நடந்த உள்ளடி வேலைகளே காரணம் என்று கருதப்படுகிறது.
தீவிரமாக கருணாநிதி ஆதரவாளரான பரிதி, சில காலம் ஸ்டாலினின் குட் புக்கிலும் இருந்தார். ஆனால், சமீப காலமாக ஸ்டாலின் அவரை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications